Sunday, December 29, 2019

”எண்ணங்கள்...!!”



உதிக்கும் எண்ணம் உதிக்கும் மூலம்
உணரத் தேடுகிறேன் – ஒருதலை சுமக்கும்
ஓட்டில் உறையும் மூளையிலா? மூளையின்
மூலைகளில் ஒன்றிலா?? மாய

மனமெனும் குடுவையோ? ஓயாதுத் துடிக்கும்
இதயத்தின் இருப்பிலா? உதிக்கும் எண்ணம்
உதிப்ப தெங்கே? உறைவ தெங்கே?
வேரில் தொட்டு தொடரவோ...!

நுனியில் தொடங்கி வேரில் முடிக்கவோ..?!
நுட்பம் நுணுகி அணுகி அருகில்
நுணுக்கப் பயணம் தொடர்கிறேன் – நீளும்
பரவெளிப் பயணம் நிற்காது...!!

உயிரென உணரப்படா உட்பொருளிலா? – எதில்
தொடங்கி? எதில் தொடர்ந்து? எப்படி
இடைவெளி இல்லாப் பயணம் நடத்தும்
எண்ணங்களின் மூலம் தேடுகிறேன்....

ஊண்பொதி சூட்சுமங்கள் உணரும் தருணம்
மூலங்களால் மூண்டு மூண்டு மூலங்கள்
தூண்டும் தூண்டல் தொடர்பில் துடிக்கும்
தூலங்கள் தாம்பொதி ஊண்...!!

காலங்கள் கடந்து ஞாலங்கள் உருளும்
கோளங்கள் யாவிலும் வண்ணக் கலவை
ஒளியுள் ஒளிந்தும் ஒலிக்குள் கலந்தும்
அண்டம் அண்டமாய் பேரண்டத்

தொப்புள்கொடி விரிந்து பரந்து விழுதாய்
வேர்விடும் மூலங்களே,- காணும் தூலங்கள்..!
கண்ணற்றக் கண்ணில் காணும் எண்ணற்ற
எண்ணங்கள் அலைமோதும் குவியல்

வலம்வரும் வளையங்கள் விண்ணின்று சுழலும்
கோளங்கள் யாவிலும் ஊடறுத்துப் பாயும்
உள்வெளி மாற்றங்கள் பால்வெளிப் பயணத்தில்
கோள்நிலை காட்டும் கண்ணாடி

தறிக்குள் ஊடும் தாரதுவாக இழைவீசும்
காந்தம் கவரும் ஒளிவீசும் எண்ணங்கள்
கலந்துக் கலந்துக் காந்தப் பொதிக்குள்
சுமந்துத் திரியும் விண்துகள்

விந்துகள் தாம்பொழி யாற்றல் பொதிந்து
ஊண்பொதி உள்வாங்கும் நுண்ணுணர் பொறிகளில்
பிரிந்துப் பிரிந்துப் போய்சேரும் வெவ்வேறு
அலைகளில் அமிழ்ந்து உமிழும்

புறப்புறத் தூண்டல்கள் நிகழ்த்தும் தொடர்வினை
அகத்துள் அடர்ந்து எழும்பும் அதிர்வுத்தொகுதி
தொகைத்தொகை பிரிவுகள் தொடர்வது பிரித்து
உணர்ந்ததை உணர்த்தும் உட்பொறிகள்

எழுந்த எண்ணங்கள் யாவும் புறத்தே
விழுந்த தொகைத் தொகுதி விந்துகள்
தாமென உணர்வார் உணர்வில் உள்ளும்
புறமும் ஒன்றே ஆகும்.