Monday, February 27, 2012

”இனிய தாகம்..!”


வருந்துமுயிர்க்கு விருந்தாய் வாழ்வளித்த ஆருயிரே..!
விரும்புமுயிர் விரும்பிய வண்ணம் விரும்பிய
அரும்பே..! குழவியின் குறும்பே..!! இதயம்
விரும்பும் எழிலே..! அடிக்கரும்பே..! ஆரணங்கே..!!

மகரந்தம் குழைத்த தேன்சுவையோ,- குரல்
மதுரம் ததும்பும் பூங்குழலோ,- குழை
மறைத்துப் பிதுங்கும் பூவழகோ,- பிறை
உதித்து வளரும் பொன்னழகோ நுதல்..!

கிளைத்த கிளையின் துளிர்த்த இலை
மிஞ்சும் மென்னழகு உன்னழகு தலை
செழித்த பூவின் முன்னழகு விழி
தொடுத்த வில்லின் நேரழகு புருவம்

சிறுத்து சிவந்த இதழழகு சிதறடிக்கும்
சிந்தனை முகிழ்த்து கிடக்கும் உனதழகு
குழைந்து கிடக்கும் குறுந்தேகம் என்னை
இழந்து தவிக்கும் வெண்மேக பூந்தேக

கிண்ணத்தில் தேன்வார்க்கும் எண்ணத்தில் பூவார்க்கும்
கன்னத்தில் கவிவார்க்கும் முத்தத்தில் செவிசாய்க்கும்
மோனத்தில் புவிபூக்கும் புன்னகை விடியல்கள்
வானத்தில் சிவந்து காட்டும் வெட்கம்.

கையணைக்க மெய்யணைக்க மெல்லியலாள் மனமணைக்க
கையடித்து கைப்பிடித்து கண்ணார காதலித்து
மொய்த்த மனம் துய்த்துக்கிடக்க தூயவள்
உருகும் ஓசை காற்றை கிழிக்கும்.

சில்வண்டாய் சிலநேரம் சிறகடிக்கும் எண்ணம்
சில்லென்ற பூங்காற்றாய் கிறங்கடிக்கும் உள்ளம்
இதழுடைத்துப் பெருகும் இன்ப வெள்ளம்
இதழடைத்து கடைவழிய வழியும் காதல்.

நாளும் நலம் சேர்க்கும் நற்றுணை
காலம் கரை சேர்த்த பொற்சிலை
காதல் தனை வார்த்த குறுந்தொகை
கண்மணி உந்தன் கயல்விழிப் புன்னகை.     

4 comments:

Kayathri said...

காற்றைக் கிழித்த மன ஓசை செவிக்கு இதமாய்...உங்கள் கவியழகு எங்கள் மனதிற்கு இதமாய்..:):)

Kayathri said...

கிண்ணத்தில் தேன்வார்க்கும் எண்ணத்தில் பூவார்க்கும்
கன்னத்தில் கவிவார்க்கும் முத்தத்தில் செவிசாய்க்கும்
மோனத்தில் புவிபூக்கும் புன்னகை விடியல்கள்
வானத்தில் சிவந்து காட்டும் வெட்கம்.// கவிஞரின் கை வார்த்தைகளில் விளையாடியிருக்கிறது..அற்புதம்..:):)

VijiParthiban said...

மகரந்தம் குழைத்த தேன்சுவையோ,- குரல்
மதுரம் ததும்பும் பூங்குழலோ- குழை
மறைத்துப் பிதுங்கும் பூவழகோ- பிறை
உதித்து வளரும் பொன்னழகோ நுதல்..!
மிகவும் அருமையான வரிகள் ..........

Kayathri said...

//கையணைக்க மெய்யணைக்க மெல்லியலாள் மனமணைக்க
கையடித்து கைப்பிடித்து கண்ணார காதலித்து
மொய்த்த மனம் துய்த்துக்கிடக்க தூயவள்
உருகும் ஓசை காற்றை கிழிக்கும்.//தூயவளின் மனம் உருகும் ஓசையும் உணரும் கவிஞனின் ரசனையை என்னவென்று பாராட்டுவது..?