Sunday, February 12, 2012

”நதி மூலம்...!”



காலன் வகுத்த வழிக்கும்
நூலோன் தொகுத்த வழிக்கும்
நடுவே நான்.....!!

எது என் பக்கம்..?
நான் எந்த பக்கம்...?
தேடல்.....!!

புத்தியின் புரிதலில்
நூல் விரிகிறது....!
நூலின் உணர்த்தலில்
வாலன் வலிமை விரிகிறது.

வாலன் வகுத்த வழி தேட
காலன் தொகுத்த விதி விரிகிறது.
விதியின் வேர்கள் பற்றி தொடர
வினையின் மொட்டுக்கள் வெடிக்கிறது.  

எதிலிருந்து எது...? எங்கே தொட்டு எங்கே தொடர்கிறது..?
வினைகளை கேட்கிறேன்...,
விதிக்கு கை காட்டுகிறது.
விதியின் கண் நோக்குகிறேன்
வினையின் வழி காட்டுகிறது.

விடுதலை வேண்டுபவன்...
இப்படித்தான் தேடுகிறான்.....,
வினாக்களில் வீசிய புயலுக்குபின்
தென்றலாய் ஒரு பதில் தேடி.....!!

ஆடிய எண்ணங்களில் அமைதியாய் விரிகிறது
நிர்வாணமாய் இந்த பிரபஞ்சம்.
முதன்முறையாய் ஆடையை பாரமாய் பார்க்கிறேன்.
முரண்பட்டு நிற்பது யார்...?

இல்லாததிலிருந்து இருப்பது பிறக்க
இருப்பது இல்லாமல் போகும்
இரகசியம் வெட்டவெளியாய் சிரிக்கிறது...!
கண் மூடிக்கொள்கிறேன்.

இருப்பதிலிருந்து இல்லாதது பிறக்க
இல்லாததின் "இருப்பு" புரிகிறது,
இருப்பதும் இல்லாததும் யார் பொறுப்பு..?
தொடரும் வினாவின் பயணம்...(?)

வினை தொற்ற எந்த விதிக் காரணம்..?
விதி தொற்ற எந்த வினைக் காரணம்..?
இருப்பதா..? இல்லாததா...??
வெற்றிடமா..? பருப்பொருளா...?

எது காரணமானாலும்....
உயிரற்றது என்ற விஞ்ஞானத்தின் கூற்று
விடையற்று விழிபிதுங்கும் உண்மை புரிகிறது...
உயிர்களின் விதியை தீர்மானிக்கும்
உயிரற்றவைகளின் உண்மை உயிர் புரிய.

வெற்றிடத்தை சுற்றி வரும் பருப்பொருள்
வெறுமையாய் சுற்றுகிறதா..?
தனிமையாய் சுற்றுகிறதா..?
வேறெதற்கு சுற்றுகிறது...?!

இயக்கமும் இயக்க மூலமும்
தூலமும் துருவமுமாய் மாறி நிற்கும்
சூட்சுமத்தில் பருப்பொருள் பிறக்கிறது.
பிறப்பது அறியாமல்.....!

பருப்பொருளிலிருந்து...
பிறப்பொருள் பிறக்கிறது.
பிறப்பு புரியாமல்....!
தொடக்கமும் முடிவும் ஒரே இடத்தில்...!

தொடக்கம் வேறு, முடிவு வேறு.
தொட்டுக்கொள்ளும் இடம் ஒன்று.
வட்டம்தான் எத்தனை வசதியானது...!!?
விட்டங்களில் அடங்கும் ஆரங்களாய்....

விடைகள் கிடக்கும் விந்தைகள் காண்கிறேன்.

3 comments:

Murugeswari Rajavel said...

சிப்பான கவிதை.

Kumar Ganesan said...

//இல்லாததிலிருந்து இருப்பது பிறக்க
இருப்பது இல்லாமல் போகும்
இரகசியம் வெட்டவெளியாய் சிரிக்கிறது...!//
உண்மை...
இதைப்புரிந்தால் வாழ்வு வாழ்வாக அமையும்...

Ranjani Narayanan said...

//காலன் வகுத்த வழிக்கும்
நூலோன் தொகுத்த வழிக்கும்
நடுவே நான்.....!!//

நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். நமக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கையை நல்லபடியாக வாழ்வோம்.

வலைசர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!