
இதயச் சோலையில் நறுமணம் வீசும் மலரே..!
உயிர்ப்பூவின் இதழ்களில் உன்னத சிருங்காரமே..!
பூம்பெழில் புன்னகை பூவிதழ் சிந்திட
பூந்தளிர் மேனியில் மோனரசம் ததும்ப
... சுழித்தோடும் வெட்கமதில் சுகம் கூட்டும்
சுந்தரி நீ..!,- பளிங்கு கன்னத்தில் தேனூறும்
பவளமல்லி உன் எண்ணத்தில் நீந்தும்
இன்பம்தான் எத்தனை எத்தனையோ...?!
குறுஞ்சிரிப்பில் குறுந்தொகை கண்டேன் - உன்
குவிந்த புருவத்தில் திருப்பாவை கண்டேன் - என்
அகம்விழுந்த உன்னகத்தில் அகநானூறும் இன்னும்
ஆற்றுப்படையும் ஆயிரமாயிரம் செந்தமிழ் செழுமையும்
கண்ணாரக் கண்டு கொண்டேன் காதலால்
ஆதலால் கண்மணியே அவிழ்நகை இதழில்
ஆனந்த தாண்டவம் ஆர்ப்பரிக்கும் இதயத்தில்
பூப்பரிக்கும் பூம்பெழிலாள் உன் பொன்மனம்
கொண்டேன் குறிஞ்சி தேன்கூட்டில் சொட்டும்
தேன்துளி பட்டுத் தெறிக்கும் பசுஞ்சோலை
மான்குட்டி முகம் காட்டி சிரிக்கும்
மந்தகாசம் உன் பொன்னழகு மிஞ்சும்
பூவழகு உண்டோ..? பூவுலகில் கண்டார் உண்டோ..?
இனியும் காண்பார் உண்டோ..? ஒற்றை
சிலிர்ப்பில் உயிர்த்தறிக்கும் ஓங்காரம் நீ..!
கற்றையாய் அலையும் காற்றில் உனைத்தேடி
அலையும் என் உயிர்த்தீண்டல் உணராயோ...?!
உள்ளத்தில் உறைந்திட்ட பைங்கிளியே.!
உள்ளூர இரசிக்கும் பொன்னழகே...! செல்லத்தீண்டலில்
சிணுங்கும் என் சிங்காரமே கண்மலர்வாய்.
5 comments:
nalla kavithai
செந்தமிழ் செழுமையுடன் உங்கள் தோட்டத்தில் மலர்ந்த மலரின் நறுமணம் எங்கும் வீசுகிறது....:):):):)
அருமை...
என் உள்ளம் மகிழ்ந்தேன்.எங்கேயிருந்து இந்த அருவி கொட்டுது.பெருமையா இருக்குங்க உங்களைப் பார்த்தா.என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் .அன்புடன்
குழந்தையே ஒரு கவிதை.
கவிதையை வர்ணிக்க
எந்த மொழியிலும் சொற்கள் இல்லை
என்பதே உண்மை...
அருமை...
வணக்கம்
இன்று உங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மானதற்கு எனதுவாழ்த்துக்கள்
பார்வைக்கு.http://blogintamil.blogspot.com/2013/09/blog-post_7.html?showComment=1378510950808#c1748643670372318665
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment