Monday, June 07, 2021

”வையப்பசி”



நெல்மணி போலிரு கண்மணி தூரிகை

தாள்மலர் முன்விரி விரல்நுனிப் பேரிகை

தட்டும் தாளங்கள் தரையினில் கொட்டும்

இசைமழை துளிகளில் தீட்டிய ஓவியம்


இதழ்குவி மலரிசை முழங்கி எழுப்பிய

கவின்மிகு வைகறைப் பொழுதுகள் இயம்பிய

கவிதைகள் மொழிந்த காரிகை கைவளை

காவியம் காணா காவிய அழகு

 

சிற்பம் தானோ?! சிற்றுளி பிறந்த

கற்பம் தானோ?! கழுத்துத் தாங்கிய

நுட்பம் தானோ?! மென்னுடல் தலை

பூம்பெழில் குலுங்கும் பூவிழி யாள்...!

 

தாய்வழியா?? தான்வந்த தாய்மொழியா?? வழிவழி

வாழ்வழியா?? கற்றதா?? உற்றார்வழி பெற்றதா??

வாய்வழி மொழிந்த மொழிகளில் நனைந்த

ஊன்பொதி சிலிர்த்தே உளறும் உள்ளம்

 

செவிக்குள் தேன்..!! சிந்தைக்குள் தீஞ்சுவை..!!

செந்தமிழ் வழியும் இதழ்கடை ஒழுகும்

பைந்தமிழ் பருகும் பரவசம் - உள்ளுள்

உருகும் ஒற்றை அருவியாய் உயிர்..!!

 

குழலும் குரலும் அடித்துக் கொள்ளும்

களத்து மேடா கன்னம்..? கனத்தது நெஞ்சம்

தாளடி சிந்தும் மணிகளா மொழி??

வளமை கூட்டும் வாழ்வியல் செழுமை

 

நிலம் மட்டுமா..? நீயும் தான்

இளமை கூட்டி எழில் காட்டும்

வனப்பில் விஞ்சும் வழிகாட்டி – கரைபுரளும்

காதல் வெள்ளம் வாழ்க்கை திசைக்காட்டி

 

பசியின் இசையை பாடுகிறேன் – பாரில்

பாடாத,- பாடப்படாத பசியின் பண்

பாடுகிறேன் செவியே சிறிதேனும் கேள்..!!

வயிற்றுக்கு வாழாதே,- வையகம் கொள்.   

Tuesday, June 01, 2021

இதயத்தோழமை..!!

 



இதயத்துக்கு அருகில் இருக்கும் சத்தியமே..!!
இருத்தல் மீதான இழப்பின் வருத்தம்
இனியும் வேண்டா தூய்மையே - பெயரில்
இருக்கும் சத்தியம் வாழ்வில் வாங்கு

பொங்கும் கண்ணீர் புடைசூழ் கன்னம்
புடைக்கும் மடையில் விடைத் தேடும்
விதியின் வழியை மடை மாற்று..!!
மதியின் துணை உண்டு – மாறாதே

நிலை கண்டு வீழாதே, - சூழ்வினை
நிலை என்று மாயாதே பாழ்வினை
அழியும் விதி சொல்வேன் கேள்
வழியும் சொல்வேன் வாழ்...!! நீ

கொள்ளும் பழியும் - ஊழ்வினை தள்ளும்
பள்ளம் கண்டு பயம் வேண்டா.?! வெல்லும்
வழிகளும் வெகுவுண்டு மீள்..!! கொல்லும்
துயர் துடைக்கும் கரங்களும் காண்..!!

அயர்ச்சி ஊட்டும் தளர்ச்சி மீட்டும்
தாலாட்டு கேட்காதே..?! நாண் ஏற்று
நரம்பில் யாழ் மீட்டு - நல்லன
நாடிவரும் நாடியின் சூட்சுமம் அறி..!!

வாடியும் வதங்கியும் நாளும் நலிந்து
உள்ளமும் உடலும் சோர்ந்து மெலிந்து
பள்ளம் மேடுகண்டே தாண்டவும் தளர்ந்து
உள்ளம் நோகும் உயர்ந்த ஊமையே..!!

நெஞ்சுக்குள் வை இதை – பாதியை
பிரிந்த பதியே கேள் – நீதியை
நிலைத்த சோதியை உறுத்தும் சதியை
பிடித்த கதியை மாற்றும் கலையை

வாதிட்டுப் பகரும் வல்லவன் சொல்
சோதிக்காமல் கேளப்பா..!! சொல்லும் வெல்லும்
தமிழ் சொல்லும் கொல்லும் விதியை
மாற்றும் மருந்து கொள்வாய் – இன்றே

ஊரும் உதவாது உறவும் நெருங்காது
யாரும் இல்லாது ஏதும் கொள்ளாது
இருந்த காலம் போய் – இனி
செழிக்கும் கோலம் காண்பாய்

மூர்த்தி தாங்கும் நெஞ்சுநிறை நினைப்புகள்
கீர்த்தி கொள்ளும் நேரம் நெருங்க
நேர்த்தி யாகநீர் நலம் யாவும்
போர்த்தி கொள்வாய் உறுதி கொள்..!!

உனக்கும் எனக்கும் ஒரு தொப்புள்கொடி
உறவுண்டு – கோப்பெருஞ் சோழனோடு பிசிர்
ஆந்தை கொண்ட நட்பின் நீட்சி
நீயும் நானும் – அஞ்சாதே அருகே

நான் நட்பென நாளும் நிழலாய்
நிசம் முன்னே நிற்க..!! கற்க
பாசம் அன்பு பரிவு காட்டும்
உறவும் உன்னுள் உனக்காய் உண்டு

கண்டுகொள்...!! கவலைவிடு,- கொண்ட தல்ல
உறவு,- நாம் தேடி கண்டதும்
உறவே,- உண்மை உணர் ..!! பின்வாங்கி
முன்பாயும் அம்பென புறப்படு – வாழ்வில்

ஆற்றும் வினைகள் பலவும் நன்மையாய்
சாற்றும் கட்டளை கல்லாய் மாற்றும்
விதியை பாழ்வினைத் தொடர் துயர்
துடைத்தே நீதி வெல்லும் நெஞ்சே...!!

நீ இழந்ததும் இழப்பல்ல – உன்னை
இழந்தார்க்கு நீயே இழப்பு,- தன்னை
கொடுப்போரை தாங்கும் அன்பில் விடு
அழைப்பு,- வாழையின் அடியில் வளரும்

வாழையென வேர்களில் துளிர்க்கும் அன்பு
வீழாது முழுமை காணாது – எழு
சத்தியமே நித்திய மெனும் வாழ்க்கை
கொள்..!! மூர்த்திகள் சாய்வதில்லை சத்தியமே..!!