Monday, June 07, 2021

”வையப்பசி”



நெல்மணி போலிரு கண்மணி தூரிகை

தாள்மலர் முன்விரி விரல்நுனிப் பேரிகை

தட்டும் தாளங்கள் தரையினில் கொட்டும்

இசைமழை துளிகளில் தீட்டிய ஓவியம்


இதழ்குவி மலரிசை முழங்கி எழுப்பிய

கவின்மிகு வைகறைப் பொழுதுகள் இயம்பிய

கவிதைகள் மொழிந்த காரிகை கைவளை

காவியம் காணா காவிய அழகு

 

சிற்பம் தானோ?! சிற்றுளி பிறந்த

கற்பம் தானோ?! கழுத்துத் தாங்கிய

நுட்பம் தானோ?! மென்னுடல் தலை

பூம்பெழில் குலுங்கும் பூவிழி யாள்...!

 

தாய்வழியா?? தான்வந்த தாய்மொழியா?? வழிவழி

வாழ்வழியா?? கற்றதா?? உற்றார்வழி பெற்றதா??

வாய்வழி மொழிந்த மொழிகளில் நனைந்த

ஊன்பொதி சிலிர்த்தே உளறும் உள்ளம்

 

செவிக்குள் தேன்..!! சிந்தைக்குள் தீஞ்சுவை..!!

செந்தமிழ் வழியும் இதழ்கடை ஒழுகும்

பைந்தமிழ் பருகும் பரவசம் - உள்ளுள்

உருகும் ஒற்றை அருவியாய் உயிர்..!!

 

குழலும் குரலும் அடித்துக் கொள்ளும்

களத்து மேடா கன்னம்..? கனத்தது நெஞ்சம்

தாளடி சிந்தும் மணிகளா மொழி??

வளமை கூட்டும் வாழ்வியல் செழுமை

 

நிலம் மட்டுமா..? நீயும் தான்

இளமை கூட்டி எழில் காட்டும்

வனப்பில் விஞ்சும் வழிகாட்டி – கரைபுரளும்

காதல் வெள்ளம் வாழ்க்கை திசைக்காட்டி

 

பசியின் இசையை பாடுகிறேன் – பாரில்

பாடாத,- பாடப்படாத பசியின் பண்

பாடுகிறேன் செவியே சிறிதேனும் கேள்..!!

வயிற்றுக்கு வாழாதே,- வையகம் கொள்.   

No comments: