Thursday, February 27, 2014

”பொன்னியம்மா..!”

 
குடகு முதல் கடைமடை வரை
குறுகியும் விரிந்தும் குடத்துள் நுழைந்தும்
இருபக்க கரைகளில் பரவிய தூரம்
இயற்கையை பசுமையாய் இருக்க செய்ய

தன்னை விரவிய தயாள குணமும்
தண்ணீராய் உருமாறி தரையெலாம் கழுவிய
தன்கடன் ஆற்றும் காரணமே - ஆறாய்
அதுவே உனக்கு பேராய் விளங்கிற்றோ..!

வாழ்வியல் வரலாறுகள் உன்காலடி கீழ்
சுவடிகளிள் பொதிந்திருக்கும் காரணமோ - உன்னை
பொன்னி என்றனறோ..?! முன்னோர் செய்த
நற்பயன் யாவும் நெற்பயிராய் ஆக்கியதால்

தாயோ எங்கள் சேய்களின் தலைமுறைகள்
தாங்கிப் பிடித்து காக்கும் காவல்
புரிந்த காரணமோ - காளி ஆனபின்னும்
புவியில் காலியாகா காவிரி கருணையே

குறுதி சுமந்து குறுகி நடந்து
கரைகள் உடைத்து கறைகள் துடைத்து
மறைகள் திகழ மண்ணில் வளர
எண்ணிலா காலம் வரமாகிய வாழ்வே..!

இருகரை யெங்கும் கருவறை தாங்கும்
திருக்கோயில் நிறுத்தி திருமறை வளர்த்து
தலைமுறை சிறக்க தமிழ்மறை செழிக்க
தமிழனாய் மடியில் கிடந்த நாங்கள்

வாழ்விழந்து வறுமை யடைந்து இன்றும்
தாழ்வடைந்து தன்னிலை மறந்த தறுதலையாய்
பாழடைந்த சமூகம் சிலதலை முறையாய்
பழுவேது மிலாதொரு கொழுவேறு நிலையடைய

பாய்ந்துவா எங்கள் பொன்னி யம்மா
தடைகள் கடந்துவா எங்கள் காவிரி
தரணியில் தமிழனை உயர்த்தும் நீர்விரி
கரைகள் உயர்த்தும் எங்கள் கறைகள்

கலைந்து கழநி காடு வயல்வெளி
திரிந்து மண்மணம் நுகரும் சுகம்தா..!
படிகள் படைகள் எதுவும் உனக்கு
தடைகள் ஆகா செந்தமிழ் நாடே..!

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

// காளி ஆனபின்னும்
புவியில் காலியாகா காவிரி கருணையே //

சிறப்பான வரிகள் பல...

வாழ்த்துக்கள்...