Thursday, January 16, 2014

”பொங்கல்”

தமிழா.............!
 

உள்ளே உறங்கி கிடக்கும் உணர்வு பொங்குக
தனியே பிரிந்து கிடக்கும் இனமே பொங்குக
கனியான மொழியாம் தமிழில் பொங்குக
காலத்தில் மூத்தவனே உண்மை பொங்குக

நீர்த்த கதைகளை களைந்து பொங்குக
நீரும் நிலமும் நமக்கென்றே பொங்குக
வீரமும் மானமும் இருகண்ணில் பொங்குக
ஈரமும் ஈகையும் நாமென்று பொங்குக

அறிவும் அனுபவம் அனுதினம் பொங்குக
துணிவுடன் தூய்மை போற்ற பொங்குக
நனித்தமிழ் சுழலும் நாவென பொங்குக
மனம் புரிந்த மரபில் வந்தோமென பொங்குக

பெண்மையை உண்மையாய் மதித்தோமென்றே பொங்குக
பொய்மையை முதலாய் மிதித்தோமென பொங்குக
வாய்மையை வாழுங்கால் போற்றியே பொங்குக
தாய்மையை தெய்வமாய் தொழுதே பொங்குக

இறந்தும் இறவா புகழாய் பொங்குக
இன்னும் இருக்கும் தமிழாய் பொங்குக
வாழ்ந்த தமிழன் வரலாற்றை பொங்குக
வழிகள் வகுத்த இனமாய் பொங்குக

இழிவுகள் களையும் கண்கள் பொங்குக
இயல்பில் அன்பில் உயர்வாய் பொங்குக
இசையாய் உயிரில் கலந்தே பொங்குக
இனிக்கும் தமிழில் இனிதே பொங்குக

சுவடிகள் தொட்டே சுவடுகள் பொங்குக
சுகமும் நலமும் சுகமாய் பொங்குக
அகமும் புறமும் அறமே பொங்குக
ஆயுள்வரை யாவரும் நலமே பொங்குக

அடைந்த அவமானம் அகற்ற பொங்குக
அவனியில் அரசன் நீயென பொங்குக
நினைவிலும் அடிமை நீங்கிட பொங்குக
நீ நீயென வாழ்ந்திட பொங்குக

இல்லம் எங்கும் இன்பம் பொங்குக
இனமான சொந்தமே எழுந்தே பொங்குக
அடங்கா திமிரில் ஆர்பரித்தே பொங்குக
அறிவுநெறி ஆண்மக்கள் நாமென்றே பொங்குக

வண்ணம் இழைத்தே வாசலில் பொங்குக
எண்ணம் கலந்தே என்றும் பொங்குக
திண்ணம் கொள்ளும் தினமெல்லாம் பொங்குக
கன்னமெல்லாம் கனிய கனிய பொங்குக

நற்றமிழ் நாளும் செழிக்க பொங்குக
நம்மாடுகள் ஆடுகள் சிறக்க பொங்குக
நம்மாழ்வார் நினைவே நம்மில் பொங்குக
நாமே ஆழ்வாரென்றே ஆழ்ந்து பொங்குக

வையகம் புசிக்க வாழ்வில் பொங்குக
வாழ்ந்திட வரலாறு நம்மில் பொங்குக
பசியும் பிணியும் பறந்துபோக பொங்குக
அன்பும் அறமும் நாமென்றே பொங்குக


எழுவாய் தமிழாய்........கருவாய் தொட்டே....!

.... எனதன்பு தமிழினத்துக்கு இனிய புத்தாண்டு மற்றும் இயற்கையை போற்றும் பொங்கல் நல்வாழ்த்து.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... சிறப்பான கவிதை...

வாழ்த்துக்கள்...