Friday, January 31, 2014

நிலவின் நிழல்...!

பிறைமதியே யாயினும் குறைமதி ஆயினள்
பிறைநுதல் பெறினும் கரைமீற நேர்ந்தனள்
கவின்வடி வாயினும் கவியே வடிப்பினும்
கொள்குறி கொள்ளல் தள்ளல் குறைபடின்

நிறைகுறி கொள்ளல் நிலைகுறி கொள்ளல்
நிறைமன நிற்றலில் நிற்பதறியா மென்தளிர்
நின்மலர் மணமெலாம் என்மன வாசமடி
நுண்மதி காண்பது நொங்கும் நுரையும்

வளர்மதி யாயினும் வான்பிறை யாயினும்
வன்மை காட்டின் சிதறும் சிந்தை
மென்மை ஊட்டின் குளிரும் உள்ளம்
தன்மை அறியா தகைமை தானாநீ

நல்மன வெளியில் போய் விழுந்த
நல்விதை முளைத்த வாயிலை எழுந்த
நன்னில மதுவோ என்னில் கொழுந்தாய்
நாளும் மூளும் நாட்ட மறியாயோ..?!

கதிர்மறை கருந்திரள் அலைவினில் உறையொளி
காணுதல் கண்மறை யாயினும் கதிர்வெளி
மீளுதல் பெண்மதி காணுமோ..? - சுடரொளி
சூழ்ந்திட இடர்தனை தாவுதல் நன்றே

தெளிநீர் கலங்கி தெளிந்த பின்னும்
தெளிவது வெள்ளம் - உள்ளம் துள்ளும்
வெள்ளிமலை மீதினில் படரும் ஒளியாய்
விழும் உயிர்தனில் ஓர்துளி அன்பினால்.

2 comments:

காயத்ரி வைத்தியநாதன் said...

//சுடரொளி
சூழ்ந்திட இடர்தனை தாவுதல் நன்றே

தெளிநீர் கலங்கி தெளிந்த பின்னும்
தெளிவது வெள்ளம் - உள்ளம் துள்ளும்
வெள்ளிமலை மீதினில் படரும் ஒளியாய்
விழும் உயிர்தனில் ஓர்துளி அன்பினால்.// அழகிய வரிகள் கவிஞரே..:)

திண்டுக்கல் தனபாலன் said...

// கதிர்மறை கருந்திரள் அலைவினில் உறையொளி
காணுதல் கண்மறை யாயினும் கதிர்வெளி
மீளுதல் பெண்மதி காணுமோ..? - சுடரொளி
சூழ்ந்திட இடர்தனை தாவுதல் நன்றே.. //

அருமை... அருமை...

வாழ்த்துக்கள்..,.