Monday, November 28, 2011

”நெஞ்சுக்கூடு..!”


தான் தொலைத்த ஒன்றும்
தன்னை தொலைத்த ஒன்றும்
தனித்தனியே தவிக்கும் தருணம்
தனிமைகள் கசக்கும் உண்மையாய்....!

தொலைத்த பொழுதுகளில்
தொலைந்த பொழுதுகளை
கலைத்து கலைத்து தேடுகிறேன்
கலையும் மனதின் நினைவுகளுடன்...!

இரவுகளில் தொலைத்த உறக்கம்
இடம் மாறுகிறது எழுத்தாய்...
இதயத்தை இறக்கிவைப்பது
எப்படி என்பதறியாமல்....?

வருவதும் போவதும்தான் வாழ்க்கையா உனக்கு..?
வந்து போகும் ஒவ்வொரு முறையும்
வெந்து போகும் என் இதயத்தை
எப்போது காண்பாய்...?

உதிக்காத திசை பார்த்தேதான் என்
இதயத்தின் காத்திருப்புகள் யாவும்
கரைய வேண்டுமா..? விழிக்கு ஒளியூட்டி
விடியல்கள் தருவது எப்போது...?

விளக்கும் இல்லாமல் உன்
விளக்கமும் இல்லாமல்... 
நான் மட்டும் இங்கே
நானாக இல்லாத இரகசியம் யாரறிவார்...?

தேனாக இனித்து விட்டு
தேனீயாய் கொட்டும் இரகசியம்
புழுவுக்கு எப்படி புரியும்....?
புரியாத புதிராய் காலங்கள்...!

அறியாத மனமும் அழுகிறது
அனுதினமும் தொழுகிறது
பிரியாத வரமொன்றில்
வாழ்க்கை தந்து போன பிரியம்தானா நீ...?

உதிரம் உறைந்த நினைவில்
உதிர்ந்து கிடக்கிறேன் 
காலங்கள் கடந்து காண வருவாயோ..? 
இல்லை காணாது போவாயோ...?!

நாட்கள் உதிர்க்கும் நரகத்தில்...
நான் மட்டும் தனியே.....


2 comments:

Kayathri said...

விளக்கத்திற்கு விளக்கமளிப்பது எப்படி என விளங்காமல் விளக்காமல் விட்டிருக்கலாம்..

அனைவருக்கும் புதிர் போடுவதுதானே காலத்தின் வேலை..காலத்தின் புதிரில் நாம்....??

//காலங்கள் கடந்து காண வருவாயோ..?
இல்லை காணாது போவாயோ...?!// வாழ்க்கை தந்து போன பிரியம் காணாது போவதும் சாத்தியமா...??

பிரேமி said...

”நாட்கள் உதிர்க்கும் நரகத்தில்...
நான் மட்டும் தனியே.....”.....:-((