Wednesday, June 16, 2010

ஓர் இரவில்...!


அன்பே..! ஆரமுதே...!! இன்னெழிளே...!!!

நின் நினைவுகள் உதிர்ந்த இடத்தில்...

நிக்குதடி என் நிகழ்காலம்.

உணர்வல்ல....உணர்வல்ல கண்மணி...அவை யாவும்

உன் உயிர் உதிர்த்த உதிரங்கள்.

நெஞ்சம் நிறைத்தவன் கொஞ்சம் விலகிவிட்டான்...

மஞ்சம் மறைத்தவன் மார்த்தழுவி தோள் அணைத்தவன்

இச்செகம் சொல்லும் இச்சையெலாம் வென்றவன்...

இன்பச் சுகமெலாம் இனிதே வழங்கி...

"இதோ வருகிறேன்" எனப் பகன்றகன்றவன்...

வருவதற்குள்....

உன் உயிர் வருந்தி...

மனத்துயர் அருந்தி...

விழிகளில் காவிரி ஏந்தி...

இரவின் மடை உடையும் வரை...

அலைபுரளத் தளும்பி உடைப்பெடுத்த

உணர்ச்சி வெள்ளத்தில்....

உன் உயிர் ஒழுகும்.. ஓசை...

அருவி சிந்தும் சாரலாய் அழகாய்....ஆழமாய்...

கசிகிறதுப் பெண்ணே..!

கண்ணகி காலத்து காதலை...இளங்கோ

எடுத்தியம்பிய பொழுது புரியாமல் போன...காதல்...!!

இதோ நீ சிந்திய கண்ணீரில்....

புரிகிறது.

உயிர்ப்பதும், உறைவதும்...

மனுகுல உயிர்க்கு அபூர்வ அனுபவமாகும்.

அதில் அடிக்கடி எனை மூழ்கடிக்கும்

உன் காதல் உன்னதம்.

சிலையென சிலிர்த்து நிற்கிறேன்.

உரையகன்ற வாளிற்றுறையும்

உதிரமென உறைகிறேன்...உள்ளுக்குள்.

இலைநுனியுறை பனித்துளியாய்....

நின் இரவின்...நின் உணர்வின்

இரகசிய கசிவுகள்....!!!

வாளின்முனை மழுங்கும்

கூர்மை உன் காதல்.

சின்ன...சின்ன சிணுங்கல்கள்...

சிலப்பதிகாரம் பேசும் குலுங்கல்கள்...

ஓர் இரவில் நீ எழுதிய சிலப்பதிகாரம்...

மிதிலைமகளின் அசோகவனத்து

சோகம் கம்பன் கைவரிகளில் புரியவில்லை.

உன் ஒற்றைவரி வேதனை....எனக்கு ...

அசோகவனத்துச் சீதையை

அறிமுகப்படுத்திற்று.

கம்பன் கைவலிப் புரிந்தது.

தவிப்பின் தகிப்பைக் கண்டு

திகைத்து நின்றேன்.

எதுவும் புரியாமல்...

இப்போதுதான் பிறந்தக் குழந்தையாய்...

விக்கித்து நிற்கிறேன்.

மனித உறவுகள் விலைபோய்விட்ட...

தனிமனித உணர்வுகள்

புதைக்குழிக்குள் போட்டு புதைத்த

இச்சமூகத்தில்....

இன்னும் இருக்கிறாள்

இதோ..!

என் கண்ணகி.!!.

என்றும் அன்புடன் .

தமிழ்க் காதலன்.

No comments: