Wednesday, October 21, 2009
"மருதோன்றி...! "
என்னை கவிஞனாக்கினாய் …!
உன்னை கவிதையாக்கினாய்…!
என் கவிதைக்கு
நீயே கருப்பொருளானாய்.
என்னை கனவு காண செய்தாய் …
என் விழிகளில் கனவானாய்…!
கனவிலும் நீயே காட்சித் தந்தாய்.
என்னை பாடச் சொன்னாய் …
நான் பாடும் பாடலானாய் …!
என் பாட்டிற்கு பதமானாய் .
இப்படி -
நான் பாடும் கருப்பொருளும் …
நான் காணும் பருப்பொருளும்
நீயானாய் …!
மாயா …
விளக்கம் காண முடியா வார்த்தை.
விளங்கி விட்டது இப்போது .
நிற்கிறேன் …!
என் நிழலாய் சிரிக்கிறாய் …!
நடக்கிறேன் …!
என் அசைவுகளை – உன்
இசைவுகளாக்கி நகைக்கிறாய் !
சிரிக்கிறேன் ..!
சிரிப்பின் எதிரொலியாய்
என்னை சிதறடிக்கிறாய் …!
சிந்திக்கிறேன் ..
உன் சிந்தனையே நான்தானே …
நானில்லாத சிந்தனை உனக்கேது? -என
என்னை நிந்திக்கிறாய் .
நிதானமாய் …
நித்திரைக்கொள்கிறேன்
என் இரவானாய் …
என் இரவுகளின் உறவானாய் …!
விடியலாய் வந்து என்
விழி திறக்கிறாய் .
என் பகலானாய் …!
என் பகல்களின் பலமானாய் …!
நினைவுகளை நிழற்படம் எடுத்து
மனம் என்றாய் …!
எனக்குள் வெட்கம் என்னைத் தின்ன …
நினைவுகளை திரட்ட முயல ...
மனசாட்சியாய் மாறி எனைக் கொன்றாய் !
என் நினைவுகளை நீ படம் காட்ட
நிர்வாணமாகிறேன் நான் .
என்னை மறைத்துக்கொள்ள
என்னிடம் எதுவும் இல்லை.
என் எண்ணங்களையும் ஊடறுத்து ..
உன்னையே முன்னிறுத்தி …
என்னை வெற்றிக்கொண்டாய் …!
ஏன் என்று கேட்டால் …
உன் வெற்றியே நான் என்றாய் …!
சிந்தனைக்குள் உன்னை
சிறை பிடிக்க முயல்கிறேன்
என்ன விந்தை !
என் சித்தத்தை… நீ
சிறை பிடித்து …
முத்தத்தால் …
முகம் துடைக்கிறாய் …!
என் சிந்தனை குதியாட்டம் போடுகிறது .
நீயோ …!
என் சிந்தனைக்குள்
குத்தாட்டம் போடுகிறாய் .
கடைசி ஆயுதமாய் …என்
கர்வம் கையில் எடுக்கிறேன் .
உன்னைக் கட்டுப்படுத்த …!
ஒரு கண்ணசைவில் …
என் கர்வம் பிடித்தாய் .
உன் கட்டழகால் …
என் கர்வம் மிதித்தாய் …!
கட்டுண்டுபோனது என் கர்வம் .
நிராயுதபாணியாய் …
நிற்கிறேன் …!
கனிவாய்
ஒரு கைக்குழந்தையை
கையிலேந்துவது போல் …
எனை முழுவதும் ஏந்திக் கொண்டாய் …!
செய்வதறியாது … எந்த
செயலும் புரியாது …
உன் விழிகளையே …
வெறித்துப் பார்க்கிறேன் .
வெற்றியின் வெளிச்சப் புள்ளிகள் என்னுள் ..!
உன் கண்களில் ஒழுகும்
காதல் கண்டு கொண்டேன் .
ஒரே ஒரு பார்வை .
என் உயிரின் காதலை
உனக்குள் செலுத்தினேன் …!
சகலமும் என் காலடியில் போட்டுவிட்டு
சரணாகதியடைந்தாய் .
அடிப்பாவி !
என்னிலிருந்த என்னை …
எல்லாவிதத்திலும் வென்றவள் …!
உன்னிலிருந்த உன்னை
உணராமல் போய் விட்டாயே !
என்னிலிருந்த நீ …
என்னைவென்று உன்னை மீட்டெடுத்தாய் …!
இப்போது புரிகிறது …!
காதல்...!
எனக்குள் இருந்த நீ …
உனக்குள் இருந்த நான் …
அதனதன் பகுதி விகுதிகளை …
அதனதன் தொகுதிகளில் …
பத்திரப்படுத்திக் கொண்டன .
முழுமை பெற்ற நிலையில் …
மனம் இலேசாகிறது .
உடல் தூசாகிறது .
என் உயிருக்கு முன்னால் …
இந்த பிரபஞ்சம் புள்ளியாகிறது .
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இப்போது புரிகிறது …!
காதல்...!
Purikirathaa Boss..
எப்போதும் புரியாது ......
Post a Comment