பிறப்பும் பின்வரும் இறப்பும் நிலைபெற
தன்னிலை எதுவென
அறியா மயக்கம்
தன்னை தானே
நிலையென நினைத்து
வாழ்வின் பிடியில்
விழுந்து
விதியின் விதியை
உணராது விழிப்பிதுங்கி
வினையை விதையாக்கி
வினையுமாக்கி,- தானே
வாழ்வின் தத்துவப்
பொருளென நினைத்து
வழிமாறும் மடமை
மானுடம்
இயல்பில் இயல்பாய்
இருப்பதை எல்லாம்
இயற்கை பொருளை
இன்னொரு பொருளாக்க
இருக்கும் இயற்கை
இயல்பை சிதைக்கும்
சிறுமை தொடரும்
மாந்தர்
நிலையாமை மறந்து
நிற்கவும் மறந்து
தொடர்ந்து தொடரும்
எதிர்வினைகள் யாவும்
மண்ணும் விண்ணும்
காற்றும் நீரும்
தன்னிலை இழக்கும்
தவறுகளே..?!
நுனியேறி அடிமரம்
வெட்டும் அறியாமை
அறிவியல் என்றும்
அறிவு என்றும்
அடையாளம் சொல்லும்
மூடர்கள் நிறைந்த
உயிர்க்கோளம்
உயிர் பிழைக்குமா..??
உன்னுயிர் மட்டுமா..?
உலகம் என்பது..?
அண்டவெளி எங்கும்
தேடியும் இன்னும்
உயிர்க்கோளம்
காணாத அறிவியல் உனக்கு
உணர்த்தாத உண்மை
அறி..!!
இருப்பது ஒருபூமி..!!
உயிர்க்கோளம் இதுவே..!!
இருப்பதை அழிப்பதை
நிறுத்து,- இனியேனும்
பறப்பதை பிடிக்க
நினைத்து இருப்பதை
விட்டுவிடாதே
பரவெளியில்,- உன்வீடு
இதுவென்பது
மறந்து கொள்ளிக்கொண்டு தலை
சொறியும் தற்குறித்தனம்
நிறுத்து,- மானுடம்
மட்டுமல்ல மண்ணில்
கோடானுகோடி உயிர்கள்
இன்புற்று வாழ்வதும்
இங்கேதான்..!!
வாழவந்த நிலைமறந்து
வாழ்வை தொலைத்து
தானும் வாழாது
வாழ்வதையும் வாழவிடாது
தன்வீட்டில்
தீவைக்கும் திமிரை விடுத்து
தன்தவறை தானே
திருத்து.
