இளந்தளி ரெனத்துளிர் நுண்ணுணர் மென்மன
இளமையின் இதழ்களில் பனித்துளிக் காதல்
பளிங்கென அமர அழகான மோதல்
பரவசம் காட்டும் செல்களின் இயக்கம்
சிலைக்கு சிலிர்த்து மலைக்கு வியர்த்து
மழைக்கு குளிரும் மகத்தான உணர்வில்
இழையோடும் இன்பம்தான் எத்தனை எத்தனையோ..?
கனவெது? நினைவெது? கண்முன்னே சுழல்வது
தலைநிமிர் தனித்திமிர் துளிர்த்திடும் மனத்தினில்
முட்டிவெடிக்கும் எண்ணங்கள் முத்துச்சிரிக்கும் கன்னங்கள்
கட்டி அணைக்கத் தூண்டும் கரங்களில்
கவிதைப் பூக்கும் விரல்களில் - உயிர்
ததும்பும் இதழ்களில் புன்னகைப் பூக்கும்
கதம்ப உணர்வுகள் கவின்மிகு மாலையாய்
நிரம்ப வழியும் இதயத்துள்ளே எங்கும்
நிரம்பிக் கிடக்கும் இன்ப நுகர்வுகள்
மின்னல் பிடித்து ஊஞ்சல் ஆடும்
மின்மினி பூக்கள் வாழ்த்து பாடும்
கண்மணி அவளைக் கண்டு விட்டால்
காட்டாறு கட்டவிழ்ந்த நிலையில் மனம்
மூவாறு பருவத்து முகிழ்ப்பில் திளைக்கும்
இருநான்கோடு ஒன்றும் சேருணர்வு களிக்கும்
ஒருகூட்டில் இருகிளிகள் வசிக்குமென் உயிர்க்கூட்டில்
பெருவெளியில் என்வீடு பால்வெளியில் தேன்கூடு
ஒளிமழையில் ஓரியாடி ஒலிமுகையில் தலைதுவட்டும்
ஒய்யாரம் என்வாழ்வு மெய்யாரம் என்னழகு
கண்ணுக்கு விருந்தாக கண்ணாமூச்சி கோளாட்டம்
கைக்கெட்டும் தூரத்தில் அடர்பிழம்பு சுழன்றாடும்
எக்கால மிடுகிற இடியெல்லாம் என்னெழுத்து
முக்கால முமிருந்து முடிசூடும் பொன்னெழுத்து
கற்கால மும்மனிதப் பொற்காலமும் வடிக்குமென் எழுத்து
புவியென்ற நூலில் புகுந்தேன் தலையெழுத்து.
3 comments:
பரவசப்படுத்துகிறது எழுத்துக்கள்...
தொடர்ந்த தங்கள் வருகையும், ஊட்டும் உற்சாகமும், கருத்து சிந்தும் கனிவும் எம்மை மகிழ்வுற செய்கிறது. நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே,
கவிதை அருமை நண்பா...
Post a Comment