இங்கே பிறந்தோம் இங்கே வாழ்ந்தோம் இன்பம் துன்பம் இரட்டைகள் யாவும் இங்கே கடந்தோம் காலம் தோறும் இங்கே தவமாய் கிடந்தோம் துடிப்பும் நடிப்பும் அறிவும் ஆற்றலும் திரிதலும் நிலைத்தலும் தேடலும் நாடலும் தேவைகள் மாறியும் ஓடிய காலங்கள் தேன்கூட்டு சேமிப்பாய் தேகத்தில் வான்கூட்டு வகைதனில் வந்ததிந்த பிடிமானம் வான்கூட வகையாய் பிரிந்ததே பரிணாமம் நாட்கூட நாட்கூட பிரிவினில் உறவுகள் பிறந்து பிறந்து செரித்தது வலிந்து கட்டி வரிந்து கட்டி வலிமை கூட்டி புலமை காட்டி இனிமை தேடி இருத்தல் தேடி இங்கே கிடந்தோம் - மிகுதியின் மிச்சமாய் பாலினப் பகுப்பில் படைப்பென நிகழ்த்திய பருப்பொருள் கடத்தல் வெளிவர விழுமிய உடற்பொருள் நுணுப்புகள் திமிரிய வெதும்பலில் விழுந்து கிடந்தோம் தன்னால் ஆவது தானொன்று மில்லை தன்மையுள் தன்னை அறியாத தொல்லை திண்மையாய் உரைத்தும் பன்மையாய் கேள்வி கேட்பது நாம்செய்யும் வேள்வியாய்
பிறையின் பிறழ்தல் பிழையென பிறழ்தல் பிறையது சுழலச் சுழலும் முழுமை குன்றல் குன்றென நிற்றல் யாவும் இயக்க நிலை மாற்றம்.
செறிவடர் செங்கீற்று சுடரொளி சிதறிய புறவெளி சிந்திய பொன்னொளி பதறிய ஆழியின் ஆர்த்தெழு அலையொலி ஒளியருவி ஊடறுத்த கண்ணொளி கவினுரு புலநுகர்வு புத்தியில் அழுந்திய கழிமுக வண்டல் வளமென் கவிதை சுழிமுகத் தென்றல் சுகமென தழுவல் சுழுமுனை அடிபொதிந்த கருப்புதையல் எழுவன எண்ணங் கள்ளென என்னுள் ஏழ்கடல் கொதிப்பு ஆழ்மடல் விரிப்பு தாழ்மடல் திறப்பு பாழுடல் தகிப்பு ஆழ்மனச் சிரிப்பில் அடங்குதல் வாள்முனை விழியில் கூர்முனை காட்டிய வன்மம் துணிந்த உள்மனக் குவியல் ஆற்றல் பொழிதல் அனுபவ குளியல் வீரிய விதைகளின் முளைப்பில் கண்டும் விண்டும் கவிதையில் முகர்ந்தும் பண்டும் தொண்டும் புவியினில் விழைந்தும் பண்பும் அன்பும் பரணில் ஏறிய கண்டம் கண்டதும் தகுமோ...?
குடகு முதல் கடைமடை வரை குறுகியும் விரிந்தும் குடத்துள் நுழைந்தும் இருபக்க கரைகளில் பரவிய தூரம் இயற்கையை பசுமையாய் இருக்க செய்ய தன்னை விரவிய தயாள குணமும் தண்ணீராய் உருமாறி தரையெலாம் கழுவிய தன்கடன் ஆற்றும் காரணமே - ஆறாய் அதுவே உனக்கு பேராய் விளங்கிற்றோ..! வாழ்வியல் வரலாறுகள் உன்காலடி கீழ் சுவடிகளிள் பொதிந்திருக்கும் காரணமோ - உன்னை பொன்னி என்றனறோ..?! முன்னோர் செய்த நற்பயன் யாவும் நெற்பயிராய் ஆக்கியதால் தாயோ எங்கள் சேய்களின் தலைமுறைகள் தாங்கிப் பிடித்து காக்கும் காவல் புரிந்த காரணமோ - காளி ஆனபின்னும் புவியில் காலியாகா காவிரி கருணையே குறுதி சுமந்து குறுகி நடந்து கரைகள் உடைத்து கறைகள் துடைத்து மறைகள் திகழ மண்ணில் வளர எண்ணிலா காலம் வரமாகிய வாழ்வே..! இருகரை யெங்கும் கருவறை தாங்கும் திருக்கோயில் நிறுத்தி திருமறை வளர்த்து தலைமுறை சிறக்க தமிழ்மறை செழிக்க தமிழனாய் மடியில் கிடந்த நாங்கள் வாழ்விழந்து வறுமை யடைந்து இன்றும் தாழ்வடைந்து தன்னிலை மறந்த தறுதலையாய் பாழடைந்த சமூகம் சிலதலை முறையாய் பழுவேது மிலாதொரு கொழுவேறு நிலையடைய பாய்ந்துவா எங்கள் பொன்னி யம்மா தடைகள் கடந்துவா எங்கள் காவிரி தரணியில் தமிழனை உயர்த்தும் நீர்விரி கரைகள் உயர்த்தும் எங்கள் கறைகள் கலைந்து கழநி காடு வயல்வெளி திரிந்து மண்மணம் நுகரும் சுகம்தா..! படிகள் படைகள் எதுவும் உனக்கு தடைகள் ஆகா செந்தமிழ் நாடே..!
சிலை என்ற ஒன்றில் நின்றது சிவம் என்ற ஒன்றாய் சுழன்றது சவம் என்ற பலவாய் கிடந்தது சகம் என்ற நிலையாய் திரிந்தது சுகம் என்ற சூத்திரம் பிறந்தது அகம் என்ற சூட்சுமம் வளர்ந்தது முகம் என்ற பாத்திரம் பிரிந்தது இகம் என்ற பானையில்.
இசையருவி கொட்டும் மலையருவி திட்டும் தாளகதி மாற்றி மாற்றி தகதிமித்தோம் தழுவலும் துள்ளலும் பாவம் மாற்றி தன்னடை மாற்றி பண்நடை மாற்றும் காட்டாறு கரையோரம் இன்பத்தை கொட்டும் சின்னஞ்சிறு புள்ளினம் உற்சாக துருதுருப்பில் எண்ணமுறு மனமோ இன்பக் குறுகுறுப்பில் வண்ணம் பலகாட்டி வாரியிரைக்கும் நீரலையில் கவின்மிகு கவிதைகள் கொட்டி இறைத்து கரைபுரண்டு அலைதிரண்டு கட்டி அணைத்து கவிபாடி புவியோடி வாழ்வின் வேர்கள் கணந்தோறும் உயிர்பித்த கருணை வடிவம் மண்ணில் பொன்னை வாரி இறைக்கும் தண்ணீர் பந்தல் இராகம் அமைக்கும் உயிரின் இசையாய் மையல் கொள்ளும் இயற்கை நதியாம் எங்கள் தாய்.
மின்மினிகள் கலைந்து கலைந்து அலைந்து மின்னல் கோடுகள் வரைந்து காட்டும் இரவின் ஒளி கோலங்கள் சிரிக்கின்றன உதிராத விண்மீன்கள் உறைந்து கிடக்க பறந்து பறந்து ஆசை மூட்டும் பரந்து விரிந்த வான்மீன் பார்த்து திறந்த வெளியில் சுதந்திரமாய் திரிந்து கண் சிமிட்டி சிரிக்கும் ஒளிச்சுடர்..! அடர் இருளை ஒளிவீசி கிழிக்கும் ஆனந்த பயணம் ஆர்பரித்து எழும்ப ஒளிவீசும் ஒங்கி உயர்ந்த மரங்களில் கைவீசி நடக்கும் கண்மணிகள் மின்மினிகள் இடமும் தடமும் பெயரா ஒளிமீன்கள் இந்த காட்சி கண்டு நாணி விழுந்து இறக்கும் விடியல்கள் ஏராளம் விடிந்த பின்னே இரண்டுமே...!!
எனக்கென்ன எதுஎது எக்கேடு கெட்டாலும் தனக்கென்ன தன்வரையில் எல்லாம் சரியாயிருக்க உனக்கென்ன வந்தது இப்படி உரைக்கிறாய்..? உனக்கான போராட்டம் உனக்கானது - அதில் எனக்கேதும் பங்கில்லை ஏனென்றால் நீயும் நானும் நாமில்லை - பிறகென்ன கேள்வி பிரிந்து நின்றே நம் வேள்வி பிளவுற்றே பிரிவுற்றோம் பிரதேச பிரதிநிதிகளாய் வந்தவன் ஆளட்டும் - இங்கு வாழ்ந்தவன் மாளட்டும் மண்ணில் தஞ்சம் பிழைக்க வந்தவன் ஆளட்டும் - தரிசு திருத்தி தரணி ஆண்டவன் தொலையட்டும் - நமக்கென்ன..? வெட்கமா...? மானமா...? இரண்டும் கெட்டான் பெற்ற பிள்ளைகள் நாங்கள் - பிறவியால் மண்ணில் விளைந்த தொல்லைகள் நாங்கள் ஒருபிடி சோற்றுக்கும் ஒருகுவளை நீருக்கும் பஞ்சம் பிழைக்கும் அடிவயிற்றுக் கோழைகள் எங்கள் தேசத்துத் திண்ணை தூங்கிகள் அயலான் வீட்டு வெண்ணை நக்கிகள் நாங்கள் உயர்ந்த மானுடத்தின் அடிமைகள் எங்களை “தமிழன்” என்கிறது உலகம். எங்களை “திராவிடன்” என்கிறோம் நாங்கள் எங்களில் எங்களை பிரித்து ஆளும் எங்களுக்கான தலைமைகளின் சதியாட்டம்.
சிறுசிறு தூறலில் சிதறிய மணலில் சிதறிக் கிடக்கிற சிந்தனைத் துளிகள் உதறி எழுந்த உதறலில் தெறித்த சிறுசிறு மண்துகள் மனதின் நினைவுகள் ஊணுறை உயிர்வரி வரைந்திட துடிக்கும் உளிகளாய் விழுந்திடும் துளிகளின் வீச்சும் செதுக்கவே சிதைத்திடும் சிறுகல் தெறிப்பும் உள்வெளி திருத்தம் உள்ளொளி பெருக்கம் கண்ணுறா பொலிவு மனமது கண்டு கல்லுற்ற கடினத்தில் சொல்லற்ற வடிவத்தை தன்னுற்ற கரத்தாலே தன்சிந்தை திறத்தாலே எண்ணற்ற எழிலார்ந்த சிற்பங்கள் முடித்தானே.
ஒருகை யகல நிலம் ஆள இருகை கூப்பி தலை வணங்க வருகை தரும் தலைகள் பாரடா..! உவகை கொள்ள ஏதுமிலா உயர்ந்த குறிக் கோளுமிலா தளர்நடை தலைவரை காணடா..! மாறுகை ஓங்கி மண்ணில் மாறுகால் வாங்கா நிலையில் நூறுகால் நடுவதை தடுப்பதாரடா..! தாரகை கள்விற்கும் தந்திரமும் தாரை வார்த்த கண்ணீரும் தமிழனை அழிப்பது கேளடா...! மனிதம் கொன்று மண்ணை ஆளும் மிருகம் நமக்கு தலைமை கொள்ளல் ஏனடா..?
கருதிய கருத்தும் மனதில் இடைச்செருகிய எண்ணம் உள்ளெழு சிந்தனை வாய்மொழிந்த சொல்லும் கல்லென விழும் கவிதையோ..? புல்லென எறிந்த பூவோ..?! - அறியேன் நில்லென நிற்றலும் செல்லென ஏவலும் வாவென்ற ழைத்தலும் வாடிக்கை தானுனக்கு வெதும்பும் மனதில் வேடிக்கை தானெனக்கு ததும்பும் விழிகள் கதம்பம் கோர்க்கும் கண்ணீர் மாலைகள் கழுத்தில் விழுந்தும் கனத்த மார்பில் நனைத்து பரவும் அடர்ந்த நினைவுகள் அழிக்கும் முயற்சியோ..? அறியேன் - சூதென்ற உன் வாதமும் சுள்ளென்ற சொல்லும் கொல்லென்று சொல்லும் கருகிய கட்டையில் உருகிடும் நெய்யது உதவாது உயிர்க்கு - பேதமிலா பெருந்தீ நின்றெறி தலைமுதல் கால்வரை கோபத்தீ சென்றெறி உந்தன் உளவழுக்கும் வழக்கும் கண்டறி காணுதல் மெய்யதும் மெய்யற்ற மேன்மை தன்னில் போய்நின்ற பொய்யழகே...! கையற்ற வாழ்வினுக்கே கடைக்கண்.
நுனியில் பற்றியத் தீயின் நாக்குகள் கசியும் புகையை நுகரும் மனிதம் இசையின் சுரங்களை உணர்தல் இயலுமா..? எரியும் புல்லாங்குழல் கேட்கிறது... விளக்கின் ஒளியில் விழுந்து இறக்கும் இரவு வாழ்க்கை வாழ்ந்து முடிக்கும் விடியலில் எழும் கதிரவன் ஒளியால் கவரப்படாத விட்டில் பூச்சிகள்... பூக்களைத் தின்று இலைகளில் கூடுகட்டும் புழுக்களின் பசியினில் அழிந்திடும் செடிதனில் அழகிய தலைமுறை பிறந்திட வேண்டியே ஆழமாய் வேர்களின் பயணம்... புழுக்களை கொன்று புரதம் எடுக்கும் வன்மம் காட்டும் வனச்செடி இன்னும் வண்டுகள் தின்று வாழ்ந்திருக்க கூடுமெனில் வேர்களின் வேலைதான் என்ன...? ஒட்டகம் குடித்த நீரைக் குடிக்க ஒட்டகம் கொல்லல் புனிதம் என்னும் பாலையின் தர்மம் பரவிய உலகம் ஒட்டகம் கடிக்க ஒவ்வுமா...? இழுபறி நிலையில் இருக்கும் இறைச்சியில் ஊசலாடும் உயிரின் வேதனை உணர்தல் கோரைப்பல் கொண்டு கிழிக்கும் பசிக்கு காலம் காலமாய் இரையாமோ...? கொல்லலும் வெல்லலும் துள்ளிய துள்ளலும் ஒருகோடியில் மறைந்த அதிசயம் கண்டும் ஆயிரம் காரணம் அடுக்கியே காட்டும் ஆறாம் அறிவை என்சொல்ல..?
அங்குச பயம் அழியாத களிரின் அறியாமை பிளிறல் வான் கிழிக்க அங்குசம் ஏந்திய கைகளில் நடுக்கம் அறிந்தால் நடக்கும் ஆபத்து அறிந்தே சுருங்கலும் விரிதலும் அறிவுக்கும் மனதுக்கும் சூட்சும புரிதலில் அடங்கும் தேடலில் சுருங்கும் ஒன்றே வாழ்வில் அடங்கும் சூழ்நிலை வகுக்கவோ கடக்கவோ இயன்றது வாழ்நிலை வகுக்கும் தொகுக்கும் பகுக்கும் வாழ்தலை அனுபவம் ஆக்கித் தெளியும் நூதன வழிகள் நுணுக்க முறைகள் நன்னறிவில் ஏற்றி வைத்து நடமிடும் அற்புத குவிதல் அழகிய விரிதல் சொற்பதம் தொகுத்து கற்பத நூலில் கைவினை ஆக்கும் முற்பத நாளில் மாமரம் மறைத்த மதயானை தன்னில் பூமர நிழலில் சாமரம் வீசிடும் பாமரச் சாயலில் காய்மரம் ஏசிடும் கனியா அறிவின் சுவடில் காயும் தனியா தாகம் வாழ்வின் மோகம் வெஞ்சன சுகமும் வெஞ்சின பகையும் மிஞ்சின அளவில் அஞ்சுக அஞ்சற்க வேழம் கொள்மதம் மனம் கொள்க ஆயிரம் அங்குசம் அடக்கும் நம்மை தோளுரம் நெஞ்சுரம் நீங்கா இனமடா தோழமையே..! போர்த்திக் கிடக்கும் சோம்பல் முறித்தே பூமகள் புதல்வன் நாமென முழங்கு மனமே முழங்கு.
கிண்ணத்தில் எடுத்த முதம்தனை ஊட்ட கன்னத்தில் வாங்கி கடையிதழ் சிந்தி குழைத்து குழைத்து வழித்து திணிக்கும் குழைந்த அமுதம் தாங்கும் குமுதம் இளைத்து மெலியா திருக்க காட்டும் நகைத்து நடித்து சுவையை ஊட்டும் குழலென நெளித்து குவளைவாய் இசைக்கும் மழலையின் யாழென குரலின் மயக்கம் தவழல் தழுவல் இரண்டும் கலந்தே தானே நடக்கும் உணர்வின் கலத்தல் மானே..! மயிலே..! ஊணே...! உயிரே...! தேனே..! தென்னவ செல்வமே..! அன்னமே..! அஞ்சிக் கொஞ்சி ஆசையில் மிஞ்சி இலவம் பஞ்சாய் இருகை ஏந்தும் அழகின் ஊற்றில் அருந்தவ தேற்றல் கலைய கஞ்சியில் காணும் சுகமாய் இருந்த சுகம் இழந்த சுகம் ஈடுசெய் பேறாய் ஈன்ற சேயாம் இருதலை கொள்ளிக்கும் இருதலை கொல்லிக்கும் இருத்தலை சொல்லியே இயம்புதல் வாழ்வாம்.
மிகுவன மொடுமலை பாயும்நதி சூழும் பரந்த நிலம் கரடும் முரடும் திருத்தி கதிர் விளைந்து குதிர் நிரம்பும் பணிசெய் பைந்தமிழ் பாட்டன் பூமி நெடுநெல் வெண்கரும்பொடு செங்கரும்பு சிறுதானியம் பயிர்த்தொழில் உயிர்த்தொழி லாம்நமக்கு - ஆவியில் விளைந்த அருந்தாகம் மேவிநின்ற வாழ்வினில் அலைந்து திரிந்து அல்லும் பகலும் ஆக்கிய நல்வினைகள் நமக்காய் இன்னும் ஆறாய் குளமாய் ஏரியாய் குட்டையாய் கோயிலாய் சத்திரமாய் சரித்திரமாய் யாவும் நிகழ்காலம் காட்டி நீளும் சாட்சியாய் ஆயினு மென்ன அறியா நமக்கு நாயினு மிழிந்த நிலை யறியா வாழ்வினை பிடித்து தொங்கும் வௌவால்கள் நல்லதும் நன்றியும் மறந்து திரிய அல்லதை கட்டி அடுத்த தலைமுறைக்கும் அதையே காட்டி ஊட்டி வளர்க்கும் சதை விற்கும் சமூகத்தின் அடர்நிழலில் கதை கொண்டு எழுவாத அனுமன்கள் உழுத நிலம் உண்ட வீடு பழுதாய் விட்டு - கண்டம் பாயும் அண்டத் துகளாய் பிண்டம் மாய்தல் அறிவியல் என்றே இயம்புதல் நன்றோ...?! குன்றின்மணி குணம் மனிதரில் ஒரு குன்றின்மணி அளவேனும் இன்றேல் நமக்கு குன்றும் ஊணும் உயிரும் இழிந்தே குறித்த நல்வழி குறித்தே.