Thursday, March 31, 2011

"தமிழினத் துரோகி..."




எனதன்பு தமிழின உணர்வுள்ள தமிழர்களே...! இந்த நூற்றாண்டின் கொடுங்கோலன், தமிழனுக்கெதிரான ஹிட்லர், மனிதசதைத் தின்று தன் இனப் பசியாற்றும் பரதேசி, இரத்தத்தை அருவியாய் ஓடவைத்து இலங்கையை தட்டிப்பறித்து, தமிழனை வாழவொட்டாமல் இனத்தை அழித்த இராட்சசன் இராசபக்சே இப்போது இந்தியா வந்து செல்வது என்பது மாமனார் வீட்டுக்கு வந்து போகும் மருமகன் போல ஆகிவிட்டது. ஒருதேசத்தின் பாரம்பரியமிக்க இனத்தை அழித்தவனை இங்கே சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் காங்கிரசும், அதன் தலைவர்களும், நம் இனத்துரோகி என்பது சொல்லாமலே விளங்கும்.
 

காங்கிரஸ் கட்சி எப்போதுமே தென்னகத்தை பின்தங்க வைத்தே பார்த்திருக்கிறது. அதிலும் தமிழன் என்றால் மாற்றாந்தாய் பிள்ளைதான். இந்நிலையில் நாளை திருப்பதிக்கு வர இருக்கும் இரத்தக்காட்டேரி இராசபக்சே வை எதிர்த்து தமிழகத்தில் உணர்வாளர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க இதன் மூலம் கோருகிறோம்.


 1,50,000  பேரை போர் என்கிற பெயரில் அரக்கத்தனமாய் கொன்று குவித்த மனித உருவத்தில் உலவும் மிருகம் இராசபக்சே இந்தியாவுக்குள் நுழையக்கூடாது என்கிற நம் எதிர்ப்பை எல்லோரும் இதன் மூலம் தெரிவிப்போம்.




அப்பாவி மக்களையும், பெண்களையும், குழந்தைகளையும், பத்திரிக்கையாளர்களையும் கொன்று குவித்து உலக அரங்கில் இன்று 
தன்னை ஒரு தலைவனாய் காட்டிக்கொள்ளும் கொடுங்கோலன் 
தமிழுக்கும், தமிழனுக்கும் எதிரி என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

*********************************************************************





தமிழகத்தில் தற்போது தேர்தல் சூடுப்பிடிக்க ஆரம்பித்து விட்டது. ஆளுக்கு ஆள் அதைத் தருகிறேன், இதைத் தருகிறேன் என்று இலவச மயக்கத்தை மக்கள் முன் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் டீ.வி., மிக்சி, கிரைண்டர், இப்படிப் பட்ட பொருட்கள்தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் என்பது போல் நமது அரசியல்வாதிகள் பேசிவருகிறார்கள்.

எந்த சமூகப் பொருளாதார தொலைநோக்குப் பார்வையும் இவர்களிடம் இல்லை. தலைமுறை முன்னேற்றம், சமூக வளர்ச்சி, தனிமனித வருமானத்தை பெருக்கும் திட்டம் இப்படி எதுவுமே இல்லாமல் ஒருக் கூட்டம் நம்மை தேர்தலில் சந்திக்க வருகிறது.

எண்ணிப்பார்த்து மிகச் சரியாய் செயல்படவேண்டிய தருணமிது. மக்களே மறவாதீர்கள். உங்களின் எதிர்காலம் இவர்களைப் போன்றவர்களிடம் ஒப்படைக்கப் பட்டால் நம் தேசம், நம் நாளையத் தலைமுறை என்னவாகும் என்பதை எண்ணிப்பார்த்து வாக்களியுங்கள். தனிமனித தேசியக் கடன் ரூபாய் 3000  லிருந்து இப்போது ரூபாய் 15000  என மாறி இருக்கிறது. புரிந்து கொள்ளுங்கள்.

நம் பெயரைச் சொல்லி உலக வங்கியில் கடனை வாங்கி, அந்தப் பணத்தில் நமக்கு இலவசம் தந்து விட்டு, உலக வங்கிக் கடனை நம் தலையில் கட்டிவிட்டு, அவர்கள் வாங்கும் இலஞ்சப் பணத்தையும், சுருட்டும் ஊழல் பணத்தையும் தங்கள் வீட்டுக்கு கொண்டுப் போகும் கூட்டம் உங்களுக்கு எந்த நன்மையையும் செய்யப் போவதில்லை என்பதை புரிந்து செயல்படுங்கள்.

படித்தவர்கள் தான் நம் தேசத்தில் ஓட்டுப் போடாமல் இருப்பவர்களாக இருக்கிறார்கள். எந்தக் காரணத்தை சொல்லி நமது வாய்ப்பை நாம் பயன்படுத்தாமல் விட்டாலும், அது யாருக்கு சாதகம் என்பதை எண்ணிப் பாருங்கள். கள்ள ஓட்டுப் போடுவோருக்கு இந்த வாய்ப்பு சாதகம் ஆகா வண்ணம் நமது ஓட்டுரிமையை நாம் பயன்படுத்துவோம். அவசியம் புரிந்து கொண்டு செயல்படுவோம்.

************************************************************************


கவனத்தில் கொள்ளவேண்டியவை.....
************************************** 

* அடிப்படையில் தவறான கொள்கைகளை கொண்டிருக்கும் அமெரிக்கக் கைக்கூலியாக செயல்படும் காங்கிரஸ் கட்சியும், அதன் தவறான அணுகுமுறையின் காரணமாய் ஏற்பட்ட விலைவாசி உயர்வும், மக்கள் விரோதப் போக்கில் செயல்படும் மத்திய அரசும்,

* மாநிலப் பிரச்சனைகளுக்காகவோ, மக்கள் தேவைகளுக்காகவோ, மத்திய அரசை அணுகாதவர்கள் தங்களுக்கு வேண்டியப் பதவிகளுக்கும், தங்களுக்கு வேண்டியவர்களின் பதவிகளுக்கும், மத்திய அரசிடம் தவம் கிடந்தது....

* காவிரி, முல்லைப்பெரியாறு, ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிப் பிரச்சனை பற்றிப் பேசாதவர்கள், காங்கிரஸ் கூட்டணிப் பற்றி பேச நாள் கணக்கில் காத்திருந்து, தன்மானத்தை அடகு வைத்துவிட்டு, தங்கள் சொத்துக்களையும், தங்கள் மீதான வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ள அமைக்கப் பட்ட சுயநல கூட்டணி....

* மின்சாரத் தேவைக்கும், உற்பத்திக்கும் இருக்கும் இடைவெளி நீண்டுக் கொண்டே போகும் நிலையில் அது பற்றி எந்த அக்கறையும் இல்லாமல், நடவடிக்கை எடுக்காமல், இலவச மின்சாரம் தருவதாக சொல்வதும், இலவச மின்சாரப் பொருட்கள் தருவதும், அதன் மூலம் இன்னும் மின்சார பற்றாகுறையை அதிகப் படுத்துவதும்....


* மகன்களுக்கும், மகள்களுக்கும், பதவி கிடைக்க எல்லாவற்றையும் துறந்து விட்டு மக்கள் முன்பு உத்தமர்களைப் போல பேசுவது, திரைமறைவு மிரட்டல்கள், தில்லுமுல்லுகள்.....

*  மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு காணும் மனதைரியம் இல்லாத களவாணிகள். அவர்களின் உயிர்களில் விளையாடி தங்களின் பதவிகளை தக்கவைத்துக்கொள்ளத் துடிக்கும் இவர்களுக்கு ஒருப் பாடம் புகட்டுவோம்... 
* அரசாங்கம் ஏற்று நடத்த வேண்டிய கல்வித் துறையை, தனியாருக்கு தாரை வார்த்தது, அமைச்சர்கள் ஆளுக்கு ஒரு கல்லூரித் துவங்கி கொள்ளை அடிப்பது, ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப் படும் தேர்வுகளின் முடிவுக்கும், வேலை வாய்ப்புக்கும் எட்டாத தூரத்தில் இங்கே வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது.
 

* மக்களுக்கு இலவசமாய் தரப்பட வேண்டிய மருத்துவம், வியாபாரமக்கப் பட்டது. அரசு பணியில் இருந்து கொண்டு அங்கே கையெழுத்து மட்டும் போட்டு விட்டு, தனியாக கிளினிக் வைத்துக் கொண்டு கொள்ளை அடிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், இலஞ்சம் சரி என்பது போன்ற ஒரு அரசியல், அதிகார அமைப்பைத்தான் நாம் கொண்டிருக்கிறோம்.

* ஏற்கனவே நமக்கு அளிக்கப்பட்ட இலவச கலர் டி.வி., மற்றும் ஒரு ரூபாய் அரிசி ஆகியவற்றால் நமக்கு புதிய கடனாக ரூபாய். 1,00,192  இலட்சம் கோடிகள் உலக வங்கி கடன் நம் மீது விழுந்து இருக்கிறது. புரிந்துக் கொள்ளுங்கள். இலவசமாய் டிவியை மட்டும் கொடுத்து விட்டு, அரசு வரிப்பணத்தில் ஆரம்பிக்கப்பட்ட அரசு கேபிள் திட்டம் ரூபாய். 750  கோடியை அப்படியே விரயம் செய்து, திட்டத்தை கிடப்பில் போட்டதன் மூலம் தனியார் கேபிள் இணைப்பின் மூலம் மாதம் ஒன்றுக்கு அவர்களுக்கு போகும் வருமானம் குறைந்தபட்சம் ரூபாய். 300  கோடி, இது நமது அரசாங்கத்துக்கு இழப்பு. இது ஒரு வகையில் அரசாங்கத் துரோகம். புரிந்து செயல்படுங்கள்.

* இன்னும் ஏராளமாய் இருக்கிறது. பதிவின் நீளம் கருதி முடிக்கிறேன். சற்றேனும் சிந்தித்து வாக்களிப்போம். தமிழினத்தின் தலைஎழுத்து மாற்றப் படும் என்கிற நம்பிக்கையுடன்...........


மாற்றங்களை எதிர்பார்க்கும் மனதுடன்...
-தமிழ்க்காதலன்.                                

Monday, March 28, 2011

"பாதை மாறிய பலா"


சுழலும் எண்ணங்கள் யாவும் உன்னை
சுற்றும் இரகசியம் நீயறிவாய் மலரே
கழலும் எண்ணம் உன்னில் கண்டேன்
உழலும் நெஞ்சம் உனக்கெப்படி புரியும்..?

இனியேனும் இனியவளே
உன்னை மறக்காத என் மனதை
உதற முயல்கிறேன்.

மனம் மாறாது என்றால்
மறுபிறவிக்கு என்னை
மாற்ற முயல்கிறேன்.   
 
எத்தனை முயன்றென்ன..?
அத்தனையும் நீயாகவே
ஆனப் பின்பு.....

இந்த பெருவெளியில் நான்
தனித்திருக்க விடு...
தொடராதே....

உறவுகளை துண்டித்து
உணர்வுகளை தண்டிக்கத் தெரிந்தவளே...!
உன் நினைவுகளை மட்டும்
ஏனடி விட்டு வைத்தாய்...?

எங்கு அலைந்தும்
எப்படி கலைந்தும்      
என்னில் நிறைந்த உன்னை
தொலைக்க முடியாமல்
தொலைந்துபோகிறேன்...!

பிரிந்துப் போனவளே...
பிரியங்களையும்...
அழித்துப் போ..!

கட்டுரைத்தக் காதல்
விட்டகன்ற வித்தகியே...!
விலகல் விதியல்ல...
விதியும் அதுவல்ல...!

விளிம்பின் மையம்
வெளியில் இல்லையடி..!
புறத்தே இருந்து அகம்
புகுந்து புலம்ப வைத்தவளே..!
புரிந்துகொள்.

பிரபஞ்சம் முழுக்க பிரிந்தாலும்
பிரியமானவளே..! உன்னைப் பிரியேன்.

தனித்த ஒரு தவம்
வரமா...? சாபமா...?
பலாக்கனியாய் உன்னை மாற்றி
பகடையாடுகிறாய்...
என்னை.



முள்ளின் மீதுதான் பயணம்
முழுதும் உன்வாசம் நுகர்ந்தபடி..
உன்னை கிழிக்க மனம் இல்லை.

காத்திருக்கிறேன்.

நீ வெடிக்கும் வரை....


Thursday, March 24, 2011

"காத்திருக்கிறேன்..."


கனவென்றால் கண் விழிக்க மறையும்
உணர்வென்றால் உறங்கும் போது மறையும்
நினைவென்றால் மறக்கும் போது மறையும்
உயிரென்றால் உடல் பிரிய மறையும்

காதலே நீ எப்போது மறைவாய் ...?

இருக்கும் வரை நீ இருக்கிறாய்
இறந்த பின்னும் இருக்கிறாய்
நீ மட்டும்...!

நீ அவள் வருகைக்கு முன் வந்தாய்
நீ வந்தபின் அவள் வந்தாள்
நீ இருக்கும்போதே அவள் இருந்தால்
நீ இருக்கிறாய்...! அவள் இல்லை..?

அவளிடம் சொல்..
அல்லது
அவளிடம் செல்.

இருவரும் இல்லாத வாழ்வு
நரகம் என்று...

என்ன நினைக்கிறாள் அவள்..?
என்னை தொலைத்து
தன்னையும் தொலைத்து  
எதைத் தேடுகிறாள்..?

போகாத ஊருக்கு வழி எதற்கு..?
பொய்யாக ஒரு நடிப்பெதற்கு..?
செய்யாத சிலைக்கு விலை எதற்கு..?
பிறக்காத பிள்ளைக்கு பெயர் எதற்கு..?

இன்னும் இனிக்கிறது அவள் குரல்...
மனதில் ரீங்காரமாய்...
இன்னும் இருக்கிறது அவள் நினைவு
மனதில் பசுமையாய்...
இன்னும் வலிக்கிறது அவள் காதல்
உயிரில் உறைபனியாய்...

அவள் பாத்திரம் அறியாமல் நடிக்கிறாள்.
அவள் பாத்திரம் புரிந்ததால் துடிக்கிறேன்.
நடக்கும் நாடகத்தில்...
நான் நடிகனா..? இரசிகனா..?
நானறியேன்.

விடியும் வரை பொறுத்திருந்தால்
முடிவு தெரியுமென்றால்..?
காத்திருக்கலாம்...
இந்த நாடகம்
வாழ்க்கை...!?
முடியும் வரை...
காத்திருக்க சொல்கிறது.
..............................
..............................
..............................

காத்திருக்கிறேன்...






Tuesday, March 22, 2011

"பொய் பேசும் மெய்.."




உனக்கென்ன என்னவளே..!
உதறிவிட்டாய் என்னை
உதடுகள் உச்சரித்த பொய்களில்...

உருகும் உயிரிடம் யார் சொல்வார்
நீ உரைத்த பொய்யை..?

மனம் ஏற்ற உண்மையை
மறுத்த பெண்மையே..!
மறக்க முடியுமா...
மனதால்..?

நினைக்கவும்...
நினைத்த வேகத்தில்
நினைவுகளில் அணைக்கவும்
நிதம் பிரியப்பட்டவளே..!

முத்தத்தில் அல்லவா
முகிழ்த்தெழுந்தோம்...!
உயிர்சத்தத்தில் அல்லவா
உறைந்துகிடந்தோம்..!

முன்பனிக் காலம்
முடியும்வரை...
விடியும்வரை...
பேசிய இரவுகள்
பொய்யாமோ...?!

கொட்டும் பனிக்கும்
வாட்டும் குளிருக்கும்
மௌனத்தைப் போர்த்திய
மரத்தடியில்....
எத்தனை இரவுகள்....?

எத்தனை இரவுகள்...
நின்றபடி பேசி...
நெடுமூச்செரிந்து 
சென்ற பொழுதுகளில்...
சொக்கி நிற்கும் மனதுக்கு
யாரடி சொல்வார்..?
இன்று நீ இல்லையென்று...

கள்ளி..! உன் கனிந்த இதயம்
என்னை புறந்தள்ளக் கூடுமோ..?
காணாமல் வாடும் கண்களில்
உந்தன் பிம்பம் என்று விழும்...?

இதயம் கொன்று இன்பம் காண்பது
இயலாத ஒன்று இன்னுயிரே...!
நீ எதையும் செய்ய இயலும்
என்பது பொய்...

உறுத்தும் உணர்வுகளில்
உறக்கம் மறுக்கும் இரவுகள்
உண்மை என்றால்...
உனக்கு மட்டும் என்ன விதிவிலக்கு..?  

கல்லாய் இருந்தாலும்
கடவுளாய் இருந்தாலும்
காதலியே உன்னைக் காதலிப்பேன்.

முள்ளாய் இருந்தாலும்
மலராய் இருந்தாலும்
மறுபடி மறுபடி உன்னை நேசிப்பேன்.

காற்றானாலும் உயிர்
ஊற்றானாளும் செந்தமிழே..!
உன்னையே சுவாசிப்பேன்.

இத்தனைக் காலமாய்
தேடிய சொந்தம் நீ...
எங்கே தொலைந்தாய் என்னவளே..?

உயிர்த்திட்ட காதல்
உண்மையென்றால்
உயிர்த்தரிக்கிறேன்...

உரிமையானவளே...!
உன் காதல் பொய்யென்றால்
உயிர்த் துறக்கிறேன்.

Monday, March 21, 2011

"ஒளிந்தக் காதல்..!"


பிரியங்களை பிழிந்து தாகங்கள் தணிந்து
பிணமாக நடக்கவிட்டு ஞானம் பேசி...
இதயத்தை தூக்கிலிட்டு மனிதம் பேசுகிறாய்...!
மறக்கமுடியா நினைவுகளில் மகரந்தம் வீசுகிறாய்...!

கனவல்ல காலம் காட்டிய கோலம்
நிசமல்ல நீ சொன்ன மொழிகள்
உன்னை நிசமென்ற நான் பொய்..!
என்னைப் பொய்யென்ற நீ நிசம்..?

கரைகின்ற வினாடிகளில் உறையும் கண்ணீர்
கல்வெட்டாய் விழுந்த உன் கண்வெட்டுகள்..!
மின்னலாய்த் தாக்கிய உன் எண்ணங்களில்
மீதமின்றி உருகிப்போனது நானும், கனவும்...!

உன்னை மறைக்க என்னை எரிக்கும்
கலையை கற்றவளே...! உருவத்திலா காதல்..?
உள்ளத்தில் உள்ளக் காதலை புதைக்க
பூமியில் இல்லை இடம்,- புரி
யாதவளே...!

மேகம் கொண்டு மூடிவிட கதிரல்ல
காதல்...! உன்னை உடைத்த உண்மைதான்
காதல் என்பது எப்போது உணர்வாய்...?
இருட்டுக்குள் ஒளிந்து கொண்டால் நீ

இல்லையென்று ஆகிவிட மாட்டாய் சகியே..!  
இல்லாததது போல் இருக்கும் உணர்வல்ல...
சொல்லாதது போல் நடிக்க பொய்யல்ல...
புத்துயிர் பெற்ற புனிதமே புரிவாய்....!

நெஞ்சம் நிறைந்தவளே வந்து பார்...
வெந்து தணியும் நெஞ்சம் பார்..!
வெற்றுப் பார்வை ஒன்றை வீசிப்போ...
உற்றுப் பார்த்த என் விழிகளில்...!

"இரகசியப் பயணம்..."


சட்டத்துள் சட்டம் சகடமிட்டு வட்டத்துள்
வழுத்தி மூட்டும் தீயில் வளரும்
வாழிட மிட்டேகி வழிமாறும் தடம்
வழுக்கி தையல் புதையல் காக்கும்

பூதத்துள் புகுந்து பூதம் பெருகும்
வாதம் மிகும் பானைக்குள் சிலேத்தும
மிகுத்து மிதக்கும் ஒளியின் சுடர்
பற்றும் கொடி முற்றும் படர்ந்து

ஊட்டும் உணர்வுக் கூட்டும் உறவில்
காட்டும் காற்றுக்கு கதவு திறக்கும்
திணை தின்று தினம் விண்டு
மனைக் கோலும் மாண்பில் சுழலும்

வினைக்கு விதி மயங்கும் அழகு
சுனைச் சுருக்கி தனைப் பெருக்கி
காலம் கனிய காத்துழன்று சூனியத்துச்
சுழன்று முடிக்க உடையும் பானை.

Thursday, March 17, 2011

"கலையாத காதல்..."


உன்னைத் துரத்தும் என் நினைவுகளில்
கண்ணை உறுத்தும் தூசாய் உன் உணர்வுகள்
என்னைத் துரத்தத் துவள்கிறேன் என்னவளே
இன்னும் நீ அறியாயோ என்னை...?!

கண்களை விற்று கனவுகள் வாங்கும்
கவிஞன் இன்று உணர்வுகள் விற்று
உயிர்த் தரிக்கிறேன்...! உள்ளத்துள் உள்ள
யாவும் கவிதையில் விதைக்கிறேன், முளைக்குமோ..?!

நெஞ்சக் கூட்டில் நிலைத்தவளே..! நின்னை
வஞ்சி என்பதா..? வஞ்சகி என்பதா..?
நினைவு மஞ்சத்தில் நீங்காதவளே...! நின்னை
கெஞ்சிக் கேட்பேனா..? கொஞ்சிக் குழைவேனா..?

முற்றத்துக் கோலமாய் முற்றுப்புள்ளி வைக்க
முனைந்தவளே..! காதலின் பின்னலில் பிடிபட்ட
உள்ளத்தின் உள்ளுக்குள் சிக்கிக் கிடக்கும்
சீவன்கள் சிந்தும் கண்ணீர்க் காணாயோ...!  

உதிரும் இலைகளில் உரம்பெற்று உச்சியில்
உவப்புடன் பூக்கும் பூக்களில் உயிர்த்திருக்கும்
இலைகளின் உயிரதுபோல் காத்திருக்கும் காதல்
பூத்திருக்கும் உன் ஒற்றைப் புன்னகையில்...!

இதயத்து வேர்களில் வெடி வைக்கிறாய்
இனியவளே..! உயிர்க் கிளைகளில் விழுதுகள்
இன்னுமின்னும் ஆழமாய் உன்னைச் சூழ்கின்றன.
விரும்புவது வேர்கள் மட்டுமல்ல விழுதுகளும்....

நடிக்கத் தெரியாதவளே...! நாடக மெதற்கு..?
விழிகள் பேசும் உண்மைக்கு முன்
மொழிகள் பொய்த்துப் போகின்றன,- புனிதமே..!
நம்பவில்லை நீ நவின்றதை நான்.



சிந்தனைக்குள் சிம்மாசன மிட்டவள் நீ
சிதைக்க நினைப்பது நினைவுத் தேன்கூடு
கொட்டும் உண்மைகளை என் செய்வாய்..?
ஆடைகளில் ஆன்மா அடைகாக்கும் காதல்.    

குறிப்பு : இங்கே காதலை உணர்ந்தவர்கள் வாக்களியுங்கள். காதலில் கனிந்தவர்கள் கருத்தளியுங்கள்.             

Friday, March 11, 2011

மனமே...!

மனமே...!
மறத்துப் போ,- முடிந்தால்
மரித்துப் போ.

நினைவென்னும் திராவகத்தீயில்
நிதம் வெந்து மனம் நொந்து
நினைவற்றுப் போக
நீ எதற்கு..?

விழியே...!
பார்வையற்றுப் போ.
மனதின் நினைவுகளுக்கு
கண்ணீர் ஊற்றி வளர்க்க
நீ எதற்கு..?

எண்ணங்களுக்கு எரிபொருள் ஊற்றி
உள்ளத்தை தகிக்க
உணர்வுகளில் தீ மூட்டும்
நீ எதற்கு..?
 

ஓ.. மனமே..!
என் உணர்வுகளின் வேர்களில்
உன் திராவகம் ஊற்று.
மிச்சம் இருக்காவண்ணம்
எச்சத்தையும் எரித்து விடு.
கனவுகள் அற்றுப்போகட்டும்
கண்ணீர் வற்றிப்போகட்டும். 

மனமற்றுப் போக
மௌனத்தின் சூனியத்தில்
மையம் கொள்கிறேன்.
மௌனமே பெரும்சப்தமாய்
என் மௌனம் கலைக்கிறது.
 




ஓசையில்லா ஒரு வெளித் தேடுகிறேன்.
ஆசையில்லா திருக்க அங்கேனும் கூடுமோ...?!
அரவத்தின் மடியில் அமர்கிறேன் அவசரமாய்
அதுவும் தீண்டாமல் "தீண்டாமை" வளர்க்கிறது.

















கொடியது கவலை என்றால்..? அதனினும்
கொடியது அதன் மூலம் அன்றோ...!
விடமே தீண்டாமல் விட்டு வைக்க
விதியின் வலிமை என்ன சொல்ல...?

வியாபாரம்தான் வாழ்க்கை என்றால் இங்கு
விலைமகள் எல்லாம் உத்தமிகள்தான்,- விதியே
வாழ்க்கையே வியாபாரம் என்றால் மண்ணில்
குலமகள் எல்லாம் விலைமகள்தான்,- நிலமகளே

நீ சொல்... 



இருவருக்கும் என்ன வித்தியாசம்...?

ஒருத்தி விலைப் போகிறாள்.
ஒருத்தி விலைப் பேசுகிறாள்.    
ஒருத்தி சில்லரை வியாபாரி.
ஒருத்தி மொத்த வியாபாரி.

பண்பும் அன்பும் பயனற்றுப்போகும் வாழ்வில்
பணம்தான் பெரிதென்றால் குணம் செத்துப்போகும்
குணமில்லா விடத்து குலம் எதற்கு..?
குன்றுபோல் இருக்கும் பணம் எதற்கு..?
 

நிலம்விட்டுப் போகும் நாளில் நீ
நிலைத்ததாய் கொண்டு போவதென்ன...? இங்கே
நிழலும் வாரா நிலையற்ற வாழ்வுக்கு
நித்தமும் ஏமாற்றும் பிழைப்பெதற்கு..? சொல்...

Thursday, March 03, 2011

"விதியின் நிழல்..!"


ஓ..! என் இயற்கையே...!!

சூழும் சூழல் சுழலில் உழலும்
பாழும் மனம் பதியை வெறுக்கும்
சதியைச் சூழும் சதியில் வெதும்பும்
விதியும் வினையும் கொன்ற உயிர்...!

நனையும் பயிர் தணியும் தாகம்
அணையும் உயிர் தணியும் மோகம்
துணியும் மனம் துறக்கும் பாசம்
அணையும் உடல் அணைக்கும் உயிர்...!
 
















இப்பாழ் பிறவி எப்பாழ் பட்டு 
முப்பாழ் வினை முடிக்கும் தொட்டு
புல்லுறை பனியுறை புனித சீவன்
கதிறுறை சுடரில் காணாமல் போகுமுயிர்...!
  
பூவென்றும் பிஞ்சென்றும் காய்யென்றும் கனியென்றும் 
காணாது காற்றும் காலமும் விதியும் 
மடைதிறக்க பாயும் நதியாய் ஓடி
நடைதளர்ந்து முடியும் வாழ்க்கையற்ற யாக்கை...!
 
 
 தள்ளாடும் பூவில் ததும்பும் தேனைத் 
அள்ளிப் பருக அலையும் சீவனை
அலைகழிக்கும் காலம் காற்றில் ஒழுகும்
துளியில் உயிர்கறைய நடுங்கும் உடல்...!
 
 
குணம் நிறம் மனம் கூடுக்குக்கூடு
மாறும் மாயம் அறிந்திலேன் ஆகின்
மாற்று உபாய மறிந்து மாற்றிடுவேன்
மாறா நினைவில் மாயும் உலகை.

 
நிலையில்லா நினைப்புகளின் அலைக்கழிப்பு - மறதி
நினைத்த ஒன்றில் நிலைத்திருத்தல் - உறுதி        
சதையும் எலும்பும் சாகக் கூடும்
சகத்தி(தீ)யே அகத்துள் வாழும் அன்பு...?

குறிப்பு :  ஒரு படைப்பாளிக்கும் அவனுடைய வாசகனுக்கும் அல்லது வாசகிக்கும் உள்ள உறவு அவர்களின் விமர்சனத்தில் பிறக்கிறது. நீங்களும் ஏன் இருக்க கூடாது ஒரு படைப்பாளியாக...? அல்லது வாசகனாய்.. அல்லது வாசகியாய்.... விமர்சியுங்கள்.... (எழுத்தை மட்டும்..)

வாக்களியுங்கள்....... வாழ்க்கைக்கு.