வனமிகு நிலமதில் வனப்புமிகு முகமதி
வளரொளி பெருக்கி
அருள் மழைபொழி
விழியால் தருங்கொடை
தாரணி மீதில்
வழிமடை திறந்து
வளங்கள் நிறைக்க
இருவிழி விரிய
இருகரம் குவிய
மறுமொழி ஏதும்
இன்றி மனமது
உருகி உடலது
குறுகி மலரும்
எண்ணம் மாநிலம்
சிறக்கும் வண்ணம்
தனமுடன் தானியம்
குவிய குவிய
நலமுடன் வளமும்
வளர வளர
குணமுடன் குவலயம்
சுழல சுழல
தயைபுரி தாயென
நிலமிதில் நீயே..!!
உயிருடல் மனமொழி
வடிவுள வடிவில
உள்ளும் புறமும்
மெய்ப்பொரு ளாவது
உனதருள் – ஞாலத்தின்
ஞானம் புரிய
வான்வெளி வகையுடன்
உறவாய் நான்
பூணும் அணிகள்
நீக்கியும் தூக்கியும்
காணும் கண்கள்
காணுமோ உனதுரு
நாணும் வகை
வாழ்வியல் நாட்டம்
தேடும் நல்லுயிர்
நாடுமோ மெய்ப்பொருள்
முல்லை சூடி-
நீ நிற்க
முகம் வாடி
பலர் நிற்க
முள்ளை முல்லையால்
எடுப்பாயோ? துயர்
துடைப்பாயோ??
அரளிப்பூ தந்தவர் புலம்பல்
குறைதீர் தாயென
ஒலிக்கும் குரல்களில்
நிறைநீர் வழியும்
விழிகள் தழுதழுத்த
மொழிகள் பேசும்
மானுட ஆசைகள்
விம்மிப் புடைத்த
மென்முலையாள் – திருவடிகள்
பற்றி நின்றோர்
– தன்பற்றில் நின்றோர்
பற்றிய பற்றையும்
பட்டென அறுத்து
கருணையும் அன்பும்
காதலும் கனிவும்
உயிரை உயிராய்
வைக்கும் மந்திரமானாய்..!!