Saturday, January 01, 2011

"புத்தாண்டு"...?

மங்களம் ததும்தும் மனம்
சுபங்கள் நாடும் தினம்  
திரவியங்கள் கூடும் நாளும்
தேவதைகள் வாழ்த்து பாடும்
*****************************************
கூடலும் ஆடலும் ஆனமட்டும்
கூடுமிடம் கூடுவிட்டு போகுமட்டும்
நாடலும் தேடலும் நாணுமட்டும்
மாடமும் கூடமும் மண்மட்டும்

குறித்து வைத்து வாழ்வோம்
குறிப்பறிந்து தேவைக் கொள்வோம்
கூத்தாடி வாழ்க்கையில் கூத்தும்
குறுகிய காலம்தான் பார்..!!

ஆண்டாண்டுக்கு ஒரு உறுதிமொழி
அது உறுதிமொழியா..? உளறுமொழியா..?
அடுத்தாண்டுக்கும் இப்போதே தயார்...
அந்த "வராத வைராக்கியம்" எதற்கு..?

குறுகிப்போன வாழ்க்கைக்கு
மனுக்குலம் வாழ்க்கைப்பட்டு
கொஞ்சகாலம் ஆச்சு...
கொஞ்சம் நஞ்சு கூடிப்போச்சு

வாழ்வின் வளம், நலம் யாவும்
வையகத்தில் பொருளாய் போனது.
மனதுக்கும் மனிதனுக்கும் மதிப்பில்லை.
மானிடர்க்கு அதில் ஏதும் பொறுப்பில்லை.

"மனிதம்" பிறக்காத மண்ணில்..
ஆண்டுகளால் ஆனதென்ன...? 
"மனிதன்" பிறக்காத பூமியில்
ஆண்டுகள் வந்தென்ன..? போயென்ன..?

 



சுற்றி வரும் பூமிக்கு சுதந்திரம் எப்போ...?
சுயநலம் சூழும் வாழ்வு முடிவது எப்போ..?
நலிவுற்ற நல்ல உள்ளங்கள் வாழ்வதெப்போ..?
அப்போது பிறக்கட்டும் ஆண்டுகள்...

அதுவரை....

காலமே உனக்கு
விடுமுறை...!!            



Friday, December 31, 2010

ஓ...! என் பிரியமே...!


ஓ...!
என் பிரியமே...!

நீ என் பாடுபொருள்
நான் உனைப் பாடும் பொருள்

நீ என் கவிதை
நான் உன் உட்பொருள்

நீ என் பல்லவி
நான் உன் சரணம்

நீ என் வீணை
நான் உன் ராகம்

நீ என் சுருதி
நான் உன் சங்கீதம்

நீ என் நடனம்
நான் உன் அபிநயம்

நீ என் மௌனம்
நான் உன் மொழி

நீ என் கனவு
நான் உன் விழி

நீ என் உணர்வு
நான் உன் உணவு

நீ என் பரிவு
நான் உன் பாசம்

நீ என் சுவாசம்
நான் உன் திலகம்

நீ என் நிசம்
நான் உன் நிழல்

நீ என் பிரிவு
நான் உன் உறவு

நீ என் மெய்
நான் உன் பொய்

நீ என் கர்வம்
நான் உன் அகந்தை

நீ என் வினை
நான் உன் விதி

நீ என் இணை
நான் உன் துணை

நீ என் வாழ்வு
நான் உன் நலம்

நீ என் நிலம்
நான் உன் விதை

நீ என் சொந்தம்
நான் உன் பந்தம்

நீ என் பாதம் 
நான் உன் பாதை

நீ என் சித்தம்
நான் உன் நித்தம்

நீ என் சுயம்
நான் உன் சுயம்பு

நீ என் பிரபஞ்சம்
நான் உன் நிலா

நீ என் பாதி
நான் உன் முழுமை

நீ என் பக்தி
நான் உன் முக்தி

நீ என் "நான்"
நான் உன் "நீ"

நீ என் "சக்தி"
நான் உன் "சிவன்"

நீ என் "பரம்"
நான் உன் "புறம்"


ஓ...!
என் ஆனந்தமே...!

உன்னை நினைத்தே...
உயிர் ஒடுங்குகிறேன்...!!

ஏற்றருள்...
என் சீவனை.