Tuesday, January 14, 2014

கோலாட்ட பாடல் 2

தோட்டத்தில என்ன இருக்கு சின்னபுள்ள
தோட்டக்காரன கேட்டுப்பாரு கன்னிபுள்ள
வெள்ளரி விளைஞ்சிருக்கு சின்னபுள்ள - அதுல
வேலியும் போட்டிருக்கு கன்னிபுள்ள

சின்ன சின்ன மீனுங்க குளத்துல
துள்ளி விளையாடுது சின்னபுள்ள
காரமடையான் காத்திருக்கு கரையில
காரணம் என்ன கேளுடி கன்னிபுள்ள

கோழியும் மேயுது சின்னபுள்ள - அதுக
குஞ்சியும் மேயுது கூட்டத்துல
வட்ட மடிக்குது வானத்தில் பருந்து
வாட்ட மெடுக்குது கன்னிபுள்ள

பொந்தில பாருடி அணில் பிள்ளை
அணில் குட்டி இருக்கு உள்ளுக்குள்ள
கத்தியும் பேசாத கன்னிபுள்ள
கருடனும் இருக்கு கிளையில

விட்டத்து பூனையும் தெருவுல வந்து
விளையாடும் விதிய பாருபுள்ள
வேட்டை நாய்களும் வெறியோடு அங்கே
நோட்ட மடிக்குது கன்னிபுள்ள

அல்லியும் பூத்திருக்கு ஐய்யனாரு குளத்தில
சொல்லியும் விடாதே ஊருக்குள்ள
ஒருசோட்டு பயலுக புகுந்து அழிப்பான்
ஓரியாடி குளத்துல கன்னிபுள்ள

காடைகள் அடைஞ்சிருக்கு காட்டுக்குள்ள
காட்டியும் கொடுக்காத சின்னபுள்ள
முட்டையும் காடையும் பத்திரமா காட்டுல
மூடர்தம் கண்படாம கன்னிபுள்ள

மயிலும் குயிலும் மாந்தோப்பில் ஆடுதுடி - என்
மனசேனோ பின்னால ஓடுதுடி
வண்ண மயிலும் கானக் குயிலும்
வாழட்டும் வாடி கானகத்துல

குள்ளநரி கூட்டமொன்னு சுத்துது பாரு
முந்திரி கொல்லை மூலையில
கள்ளர் பயமும் காட்டுநரித் தனமும்
கண்டு மிரளாதே கன்னிபுள்ள

பனங்காட்டு பக்கத்துல பதுங்கும் நரிகளை
பார்த்தாலே பயம்வருது சின்னபுள்ள
பணம் காட்டும் நரிகளை விடவா
பயமின்றி வாடி கன்னிபுள்ள

கிணத்து மேட்டில் குமரிக் கூட்டம்
நீரிரைக்கும் அழகுல நிதம்
மூச்சி ரைக்கும் காளையர் கூட்டம்
சேதிய கேளுடி சின்னபுள்ள

வேலிய தாண்டாத கன்னிபுள்ள இது
வெள்ளாம திருடும் கூட்டம்புள்ள
குடத்து தண்ணி குமரிப் பொண்ணு
ரெண்டும் ஊர்சேரணும் சின்னபுள்ள

காலமும் இடமும் புரியணும் உலகில
வாழ்தலும் இருக்கு அதுக்குள்ள
வாட்டமும் வேண்டாம் வாடிபுள்ள – நாம
வாழும்பூமி பாட்டன் வீடுதானே.

Wednesday, January 08, 2014

கோலாட்ட பாடல்


அலைய அலைய அலை யடிக்குது
வலைய வலைய வாருங்கடி
வளையல் சத்தம் வானம் பிளக்கணும்
குலுங்கி குலுங்கி ஆடுங்கடி

பாட்டனும் பாட்டியும் கூடிக் களிச்ச
வாழ்க்கையை பாடுவோம் வாருங்கடி
காட்டுல மேட்டுல வீட்டில எல்லாம்
கல்லில் வடிச்சத பாடுங்கடி

இட்டதும் தொட்டதும் பொன்னானது இங்கே
பொட்டல் வெளியான பூமியில
இடுப்பு வளைஞ்சி மடிப்பு விழவே
உழைச்ச உழைப்ப பாடுங்கடி

ஆனமட்டும் இங்கே ஆணான ஆளெல்லாம்
ஆறு குளம்வெட்டி யானதிங்கே
நீரு நிலமெல்லாம் பாய்ஞ்சி வரவே
நித்த முழைச்சத பாடுங்கடி

உச்சி வெயிலுல சேத்து நிலத்துல
நாத்து நடுங்கதை பாடுங்கடி
கட்டு நெல்லுக்கட்டி களத்து மேட்டுல
கட்டி அடிச்சத பாடுங்கடி

மாட்டு வண்டியும் கூண்டு வண்டியும்
மண்ணில் பறந்தத பாடுங்கடி
மாமன்னன் ஆண்ட மண்ணும் இதுவென
மார்தட்டி குலுங்கி ஆடுங்கடி

சோழனும் சேரனும் பாண்டியனும் வந்து
சொக்கிப் போகவே ஆடுங்கடி
புலியும் வில்லும் மீனும் பறந்த
புண்ணிய பூமிய போற்றுங்கடி

விளைஞ்ச நெல்லில் விதை எடுத்து
விளைய வச்சத பாடுங்கடி
இன்று விளைஞ்சதுல விதையும் இல்லை
விதிய நொந்து ஆடுங்கடி

பூத்து குலுங்கிய பூமியில இன்று
வாட்டி வதைக்குது வறுமையடி
நம்ம வாட்டம் தீர்க்கவே வழியிருக்கா
பாட்டனை கூப்பிட்டு கேளுங்கடி

காட்டை அழிச்சோம் மாட்டை அழிச்சோம்
கருவ காட்டை பாருங்கடி
ஒருநாதி யில்லா இந்த தேசத்துல
வந்து நாம பொறந்தோம் பாடுங்கடி

கலைகள் வளர்ந்த காலமும் உண்டு
சிலைகள் காட்டியே ஆடுங்கடி
அள்ள முடியா வெள்ள மதிலே
அணைய கட்டினோம் பாருங்கடி

குள்ள நரிகளும் கூடி இங்குஒரு
கூட்டாட்சி  நடத்த வாருதிங்கே
கள்ளர் எல்லாம் கலந்து பேசி 
கட்சி நடத்துது பாருங்கடி

குறிஞ்சி முல்லை மருதம் எல்லாம்
காணாம போனத பாடுங்கடி
கரும்பு காய்ச்சி வெல்லம் எடுத்த
காலமும் இப்போ போனதெங்கே..?

இரும்பும் ஈயமும் உறுதி இழந்த
இந்த காலத்தை பாடுங்கடி
அடுக்கு மாடி கட்டிமுடிச்சு
ஆனது என்ன கேளுங்கடி...?

சொத்து சுகத்தை கட்டிக் காக்கவே
சொந்தங்கள் வெறுத்து போனதிப்போ
பெத்த தாயிக்கே காப்பகம் இங்கே
கட்டிக் கிடக்குது பாருங்கடி

கவரு மெண்டு காசு கொடுத்து
காப்பாத்தும் கதைய கேளுங்கடி
நேத்து இருந்த பண்பாடு எல்லாம்
காற்றில் பறக்குது பாருங்கடி

பூத்து உதிரும் பிஞ்சுகளே இங்கு
வேர்களை வெறுத்த நியாயமென்ன...?
காத்து வளர்த்த நன்றியும் நமக்கு
மனசில் நிக்காம போனதென்ன...?

தமிழன் தனித்த குணமும் இழந்த
தரித் திரத்த பாடுங்கடி
தலைநிமிரும் காலமும் எப்போ...?
தலை முறையை கேளுங்கடி.