நிலையான இருளின் மடியில் என்றும் நிற்காத பயணம் நீளமாய் நீள்கிற கோளமாய் கோணமாய் உருளும் காலமாய் வழியற்ற வழியில் விரைதலே வாழ்வாய் ஓடுதளம் இல்லா ஊர்திகள் என்றும் ஊர்வதில் நில்லா நிலவுகள் தோன்றும் அசைவதில் ஆயிரம் இசைகள் பிறக்கும் கல்லும் கரும்பாறை மண்மணல் துகளும் கருவறை சுமக்கும் ஊழிக்கால பிரசவம் காலகால மாய்தொடரும் கவிதைப் பரவசம் ஓலமிட்டு அழுதும் ஒயிலாக சிரித்தும் மயிலாக நடனமிடும் மௌனப்புயல் வீசிடும் ஒளிக்கோளம் வெடித்த ஒளித்துகள் விரைதலில் வண்ணம் பிறந்து வாரிஅணைக்க மேனியெலாம் எழில்கோலம் காந்தர்வ மணம் கொள்ள காத்திருக்கும் உயிர்க்கோளம் பூத்திருக்கும் விடியலாய் நிலமென நீண்ட பருவுடல் தாங்கும் உயிரதன் உணர்வுகள் ஒளியுடன் தோன்றும் உதிர்வன அதிர்வன ஒலியுடல் தாங்கும் புதியன புகுவன இழைந்திட தோன்றும் ஆதிவேக தாகம் அடங்கா பயணம் பாழ்வெளி தாண்டும் ஊழியின் நடனம் காரிருள் காட்டும் வழியில் தொடரும் காந்தபுல கண்கள் இருளைப் பார்க்கும் அடரொளிப் பிழம்பும் ஆழிருள் வெளியும் சுடரொளி ஏந்தி சுழலும் கோளம் அலைந்திட வளைந்திட ஆகிய களம் கட்டுறை கலங்களில் பொதிந்த ஆற்றல்
விட்டன தொட்டன விழுந்தவை எழுந்தவை முட்டியும் மோதியும் முகவரி மாற்றியும் இருள்வரி ஒளிவரி இடையினில் மிளிர்ந்திடும் விடியல்கள் ஒளிமோதும் ஒரு கோணம்
தத்துவ உயிர்ப்புகள் தனித்துவ முகிழ்ப்புகள் தானாகி வேறாகி தம்முள்ளே மூன்றாகி வானாகி வழியாகி விளங்கும் பொருளாகி வந்ததுவே வான்பொருள் வீடாம்.
அன்பிலும் அழகிலும் பண்பிலும் பாசத்திலும் இருவரும் பெண்கள்தான் அத்தான்... - உன் ஆத்மாவை சுண்டி இழுத்தவள் அவளா...? நானா..? பட்டிமன்றம் தவிர்க்கவே விரும்புகிறேன்
இத்தனைநாள் வாழ்க்கை சொல்லிக் கொடுத்த இதமான உன்னிதயச் சுகமும்... இன்னும் பிறவும் அனுபவித்தவள் ஆயிற்றே..?! இறுக்கம் நெருக்கம் புரியாதவளா நான்...
மொட்டாய் அரும்பிய ஆசைகள் கொத்தாய் எழும்பிய உணர்வுகள் அவளின் சொத்தாய் சேமித்த உன் ”காதல்” அறிந்தேன் என் அகமுடையவனே...
என்னை சுமந்தபடியே இதையும் சுமந்து எத்தனை நாள் திரிந்தாயோ...? ஏக்கம் தளர்ந்தாயோ...? பிள்ளைகள் பிறந்தாலும் நமக்கு - உன் பிழியும் மனதின் ஆசைகளை என்ன செய்தாயோ...?
என் மன்னவா..! உன்னை உடுத்தினேனா...? உன் உயிரைப் பிழிந்து படுத்தினேனா...? என்றேனும் என் வாழ்வின் அர்த்தம் சொல், அன்றேனும் என்பாரம் இறங்கட்டும்...
அன்பில் அலைமோதும் இதயம் கண்டேன் அவளும் உன்னைச் சுமந்தே அலைகிறாள் இதயப்பிழை செய்யா இளம் பூங்கொடியாள் இலையுதிர் காலத்து கொடியாய்... என்செய்வேன்...! என்னிதயமே..!! சொல்.
மொழிகள் கடந்த புரிதல் எங்களுக்குள் மொழியும்போதே புரிய முடிந்தது வழியே வந்தவள்தான் உன்வாழ்வாய் வந்தவளென்று விழிகளால் வீசி மொழிந்தாள்...
உன் ஆண்மை ததும்பும் உணர்வுகள் அவளுள் அவள் பெண்மை தழுவும் இன்பம் உன்னுள் இவள் கண்டுகொண்ட உணர்வு வெடிப்பை எப்படி எழுதுவேன் எனக்கானவனே...!
மனிதம் உரிமை கொண்டாடுதல் பிழையோ..?! மனிதரை உரிமைக்கோரல் பெரும் பிழையோ...?! உன் மனம் புரிந்த என் மனிதம் கேட்கிறது..? மாமா..., என்ன செய்வேன் நான்...!
அன்பில் என்னை அணைத்து வென்றவனே..! உனக்கான அன்பு இதோ துவளுகிறது... வாழ்க்கை தொலைத்து வசந்தம் இழந்து பிணம் போலும் நாட்கள் கழிக்கிறாள்...
பின்னும் யோசிக்கிறேன் அவளை பிரிந்த பின்னும் யோசிக்கிறேன் இன்னும் இதயம் இதற்கொரு விடைப்பகர வில்லையே...? பெண்மை புரிந்தவன் நீ - பெண்ணாய்
உன்னை பெற்றவள் நான்.... கேட்கிறேன் என் கம்பீரமே...! ஒப்புவாயா..? என்ன செய்யப் போகிறாய்...? என்னையும் அவளையும்...?
வாழ்தல் என்பது என்ன மாமா...? வாழ்ந்தவள் கேட்கிறேன் உன்னை என்னை என்சுகங்களை இத்தனை பத்திரமாய் என்றும் காத்தவன் என் காதலனே...!
உன்னை உன்சுகங்களை நான் என்ன செய்தேன்...? ஒப்புக்கும் ஊருக்கும் உன்னோடு ஒட்டிக்கொண்டேனா...? ஒரு பழக்க வழக்கமாய் உன்னைக் கட்டிக்கொண்டேனா? உன்னில் என்னைக் கலந்தவள் கேட்கிறேன்...
உன் சுகங்கள் விரும்பும் நான் உன்னில் வாழ்தலும் உன்னால் வாழ்தலும் உன்னோடு வாழ்தலும் உனக்காக வாழ்தலும் உனக்காக செய்தேனா...? எனக்காக செய்தேனா...?
என்னால் நீ எங்கேனும் வாழ்ந்தாயா சொல் என் சுவாசங்களில் குடியிருப்பவனே..! என் நலன்களில் உன்சுகங்கள் கண்டவன் நீ என்னை சுகப்படுத்தி தன்னை முறைப்படுத்தியவன்
உன்னை சிறைப்படுத்தி விட்டேனோ என்னில்...?! உன் சிறகுகள் வெட்டிய கரங்களில் என்கரங்களுமா..?! எத்தனை மென்மையானவன் நீ...! உன்னை இத்தனை வன்மையாய் காலம் தண்டித்ததோ...?!
இல்லை உன்காதல் துண்டித்த இரும்புச் சூழல் எதுவாயினும் உடைத்தெறியும் பேராண்மை உண்டேடா உனக்கு.. அன்பில் இடப்பட்ட அணையில் சிறைப்பட்டாயோ..?!
உன்காதல் வாழவிரும்பும் பேதைதான் நான்...! ஏனென்றால் நான் உன்னைக் காதலிக்கிறேன் என்னைச் செம்மையாக்கி செழுமையாக்கி உண்மையாய் வாழ்வித்தவன் நீ வாழணும்டா...