காத்திருக்கும் நந்தவனத்தில்
கவிஞனின் கால்தடம் பதிகிறது.
பூத்திருக்கும் பூக்களெல்லாம்
புன்னகைத் தூவி வாழ்த்துது.
கவிதைக்கு மடல் தீட்டும் மலர்கள்
கவிஞனுக்கு இதழ்க் காட்டி சிரிக்கிறது
கவிதைக்கு பரிசாக தேன்மாரிச் சொரிகிறது
கருவண்டின் ரீங்காரம் இசைமழைப் பொழிகிறது
தூரல்களாய் விழும் கவிதைச் சாரலில்
தூங்கும் மொட்டுக்கள் படிக்கும் மெட்டுக்கள்
துள்ளிவரும் சந்தங்கள் கவிஞனுக்கு சொந்தங்கள்
மடல் மத்தளத்தில் மழைத்துளி சத்தங்கள்
பூக்களின் குழல்களில் வண்டுகளின் நாதசுரம்
புல்லாங்குழலில் ஒடிவரும் கவிஞனின் ஏழுசுரம்
இலைகளைக் கட்டிக் கொண்ட வேர்களில்
இன்பத்தின் சாரங்கள் துளிர்க்கும் துளிராய்
மின்னும் இலைகளில் பொன்னும் குறையும்
மிடுக்கு காட்டிச் சிரிக்கும் அழகில்
இருக்கும் கவலை மறந்துப் போகும்
இதம் தரும் இனிய வேளை
தண்டுகளில் தாவும் கரங்களை தழுவும்
சில்லிட்ட சிலிர்ப்பான தருணங்களில் மனம்
இலைகளை முத்தமிட்டு இதழ்களை ஈரமாக்கும்
மலர்களின் நாணத்தில் மௌனம் ஆடையாகும்
புதியப் பாதைக்கு புறப்படும் கவிஞனை
பொன்வண்டும் பூச்செண்டும் தந்து வழியனுப்பும்
அன்பான அந்தவனம் எப்போதும் சொந்தவனம்
உனக்காக வாழ்ந்துப் பார்க்க ஒவ்வொருநாளும்
உயிர்ப்போடு வந்துப் போகிறான் கவிஞன்.
உணவில் உருவான ஊணின் நிலை
உருமாற்ற ஒருகட்டு விறகின் தீயில்
உருக்குலைய கறுகும் குறுகும் நெய்யென
உருகும் ஊண் தன் உரமழிந்து
பருகலும் பாசத்தில் உருகலும் பின்
புலம்பலும் பின் புலம்பி வருந்தலும்
புரியத் தொடங்கும் காலம் முடிய
புவனம் பொருள் விளங்கா உருண்டையாய்
பிறவிக்கும் பிறப்புக்கும் தடம் பதிந்த
பின்புலம் பற்றத் தொடரும் வாழ்க்கை
பின்வரும் வினைகள் கொட்டும் முரசில்
பிரளயம் உணராது ஆடும் சிரசில்
தவமொன்று தவமிருக்கும் அழகொன்று கண்டேன்
தனித்த தொருதவம் முகிழ்த்த நிலை
தவிக்கும் மனம் அடங்கும் உலை
தன்னை தான் பார்க்க குலை
நடுங்கும் நடுக்கம் தீர வரும்
ஒடுக்கம் ஒடுங்க வரும் இடுக்கண்
ஒடுங்கும் உயிர்ப் பிதுங்கும் உடல்
வதங்கும் நிலை மாறச் சுடரும்
சுடரில் சுடும் கதிர் வெளிப்படும்
சுகமென சுகம் சுகமற்ற சுகம்
அகம் தொடும் அகத்தே உதிக்கும்
அருட் சுடரில் ஆதியும் அந்தமும்.
தாய் கொண்டு வந்த தவத்தை
நோய் தின்னும் சாபமாய் வாழ்க்கை
வாய் தின்னும் உணவுக்கு செலவாகும்
காய் தின்னும் குறை அறிவு
வாழும் கலை மறந்தக் கூட்டம்
வாடிக் கிடக்க மறுவழித் தேடி
நாடிக் கிடக்கும் மனம் தினம்
ஓடிக் களைத்து தேடிக் கொண்ட
அருமருந் தாமது அருபத்து நான்கு
இழந்து விட்ட இழிநிலை நமக்கு
இனிப் பொறுக்க ஏதுமில்லை,- இழந்தவன்
இழிப்படும் நிலை மாற்றத் தேடல்
தொடர்கிறேன் பலகலைக் கொணர்கிறேன் தமிழுக்கு
தொலைந்த யாவும் மீண்டும் யாண்டும்
செழித்து வளர சேவைதான் தேவை
செய்யவே செப்பனிட இறை அப்பணியிட
முடியும் கலை யாவும் முடிக்க
மீண்டும் மண்ணில் தழைக்க வேண்டும்
மாண்டவர் போல் வாழாது உயிர்ப்பில்
மாதவ நீரூற்றி நிலம் செழிக்க
வேண்டுகிறேன் நம் கலை சிறக்க
வேண்டி யதுதரும் வேடன் கந்தன்
வேண்ட வேண்டிக் கொண்டாடத் தமிழ்
வேண்டி தமிழினம் அலைமோதும் வேளை
வருக வருக அய்யன் தமிழ்த்
தருக தந்துப் பெருகப் பெருக்கும்
அறிவு நிறைக நிறையச் செறிவு
தமிழ்ச் சிறக்க தவம் கொள்க.
ஊற்றுக் கண்வழி உருக்கொண்டு பெருக்கெடுத்து
உச்சிமலை வழிந்து விழுந்து சரிந்து
ஊர்மெச்ச வளைந்து நெளிந்து சுழித்தோடும்
உள்ளக் களிப்பில் நுரைக்காட்டிச் சிரிக்கும்
நதியும் பாயும் பாய்ந்தபின் ஓயும்
ஓய்ந்த பின்காயும் காய்ந்த பின்
மணல்வெளி காட்டிச் சிரிக்கும் கண்ணாடி
தணல் கூட்டும் தகிக்கும் எரிக்கும்
குளிர்ந்து கிடந்த ஒன்றே நிலைமாறி
திசைமாறி தீப்பற்றும் அனல் ஏறி
புனலும் கனலாகும் கனலும் அனலாகும்
புரிய வொட்டா அதிசயம் காண்
எரிதழல் எரிகிறதா..? எரிக்கிறதா..? தான்பற்றிய
விறகில் தன்னைக் கரைக்கிறதா..? கொழிக்கிறதா..?
விடும்வரை விடாமல் வீழ்தழல் சிரிக்கிறதா..?
விறகில் எரிவது நீரா..? நெருப்பா..?
ச லனம் சலனப்பட மௌனம் தாங்கும்
மையம் சலனப்பட சலனம் சபலப்படும்
சலனத்தின் சபலத்தில் சஞ்சலம் புறப்படும்
சஞ்சலத்தின் மையத்தில் மௌனம் மையமிடும்
சலனம் தாங்கும் மௌனம் சஞ்சலப்பட
சஞ்சலத்தின் சலனத்தில் சபலத்தின் தோற்றம்
மௌனத்தை ஆளும் சபலம் சலனத்திற்கு
சலனத்தில் சதிராட மௌனத்தின் சபலம்
மிகும் மிக சஞ்சலம் ஆளும்
சடலம் சாக்காடு போக்கா வேக்காடு
உடலம் தாங்க சபலத்தின் ஊர்வலம்
மௌனத்தின் மையத்தில் உயிரின் தேர்வலம்.
மலரில் தங்கி மதுவில் ஊறி
மயக்க முற்ற தேனீயின் இன்பம்
மாய உலகம் தரும் மாவின்பம்
மதி மயக்கம் தரும் அனுதினம்
சுழல் கழல் கழல கழலும்
உழல் மனம் உழல உழலும்
தழல் மேனித் தழால் தழலும்
குழல் படரும் யாழ் குழலாம்
தினைக் கலையும் தினம் வாழ்க்கை
வினைக் கலையும் இனம் வேட்கை
தனைக் கொள்ள தனம் தந்த
உனைப் போல் குணம் ஈந்த
பிறவி யாண்டும் உறவில் வேண்டும்
துறவி வேண்டும் தூயநலம் பேணல்
மறவி நீங்கி மருகி நின்று
மறவோன் பிறவான் பிறவி தோறும்
பூதத்தில் பூதம் பொதிந்த பூதத்தில்
பூதம் மிக மிகும் பூதம்
பூதத்தொரு பூதம் வைத்து புக
பூதம் புறப்பட அகப்படும் பூதம்.
இனியது இன்முகப் பொலிவது காண
இனியது இன்சொல் ஒலியது கேட்க
இனியது நற்றமிழ் சொற்கள் உதிர்வது
இனியது இமைகள் மூடி இரசிப்பது
எளியது மனிதம் மனையில் பேணுதல்
எளியது மண்ணுயிர் இன்பம் பெறுவது
எளியது மனதில் தூய்மை மண்ணுதல்
எளியது மாந்தர் சுயநலம் துறப்பது
வலியது வன்முறை தரும் வலி
வலியது வன்சொல் தரும் வலி
வலியது வாழ்ந்திட எளியது நலிந்திடல்
வலியது நல்லோர் வாயுரைத் தவிர்த்தல்
கொடியது கொற்றவன் குலமகள் பிரிதல்
கொடியது பிள்ளையை பெற்றவள் பிரிதல்
கொடியது உயிர்த்துணை உறவின்றி பிரிதல்
கொடியது கொடுமை கண்டும் பொறுத்தல்
சிலந்திக் கூடாய் சிரிக்கிறது வாழ்க்கை
சிக்கிய பூச்சிகளுள் பூச்சியாய் நானும்
சிலந்தி விரித்த வலையில் விதி
சிரிப்பதைப் பார்த்த படி...
வருந்தி பயன் இல்லை வாழ்வில்
விரும்பி ஏற்க வில்லை விருந்தை
விழுந்தவன் எழுவதற்கு விடவில்லை சூழல்
விதிக்கும் மதிக்கும் போராட்டம்...
உழைப்பில் பலன் உடன் இல்லை
உழைத்த களைப்போ தீரவில்லை தினம்
உண்மையோடு ஒரு ஒத்திகைப் போராட்டம்
உனக்கும் எனக்குமான வாழ்க்கை...
ஒட்டகத்தின் மேல் சவாரியாய் ஆடுகிறது
ஒவ்வொரு முறையும் விழாதிருக்க போராட்டம்
ஓடும் காலத்தின் வேகம் மின்னலென
ஒட்டகமோ ஆடும் படகாய்...
காற்றில் கைவீசுகிறேன் ஆற்றில் வீசுவதாய்
கைக்குப் பிடிமானமற்ற கால வெள்ளத்தில்
கைப்பிடியற்ற துடுப்பைப் போடுகிறேன்
காற்று கன்னத்தில் அறைகிறது...
அகட்டில் தாழ்ந்து முகட்டில் உயர்ந்து
அலை மோதும் எண்ணங்களில் அலைமோதும்
அன்பை அடகு கேட்கிறது வாழ்க்கை
அரவணைக்க ஆளில்லா நேரத்தில்...
மாறும் சூழல்கள் மாறும் விழலுக்கு
ஊரும் நீரென வீணாகாது சுழலும்
காலம் சுழலும் திசையில் ஞாலம்
உழலும் இரகசியம் கண்டேன்.
நினைவில் நீங்கா உணர்வில் நீ
உணர்வில் கலந்த உறவும் நீ
இதயம் நுழைந்த இன்னுயிர் நீ
யாவுமாகி என்னுள் கலந்தாய் நீ
உன்னையும் என்னையும் இடம் மாற்றி
உள்ளத்தை உள்ளத்தால் உயிரூட்டி,- என்
உண்மைக்குள் உன்னையே சிறைப் பூட்டி
உறவென உறவான உன்னதம் நீ
இரண்டறக் கலந்த இன்பம் நீ
இதம் பதம் உணர்ந்த பின்புலம் நீ
இரவிலும் பகலிலும் என்பலம் நீ
இறவா இன்பத்தின் திறவுகோல் நீ
மல்லியும் முல்லையும் மலர்ந்தக் கொடி
மரகதம் பொன்னில் பொதிந்த தளிர்
மலரும் மருவும் இழைந்த சுகந்தம்
மனதால் மனதைப் புணர்ந்த சுகம்
குணத்தால் மனதைப் பிடித்து மயக்கும்
குவிந்தப் புன்னகை மிதக்கும் விழிகளில்
குவித்து குவிக்கும் கொவ்வை இதழ்களில்
குமிழென தளும்பும் உயிர்த் திமிரும்
மட்டிலாக் கவிதை கொட்டும் மலர்
மகரந்தம் சொட்டும் இதழ்த் தேன்
மடையில் பருகும் உயிர் உருகும்
மதுவில் ஊறிய மன்மதக் கலசம்
உடையில் நடையில் ஒளிரும் ஒய்யாரம்
ஊண் உறக்கம் தவிர்க்கும் சிங்காரம்
உறவில் கலந்த உன்னத சிருங்காரம்
உண்மையை பெண்மைக்குள் உணர்த்திய ஓங்காரம்
பெறாது பெற்ற பெருந் தவப்
பேற்றால் வரமாய் வளர்ந்த கற்பகம்
பேரன்பின் முகிழ்ப்பில் மூழ்கும் அஞ்சுகம்
பெற்றதில் பேரமைதிக் கொள்வாய்.
வீணில் கழியாதப் பொழுதுகள் தந்து
விழலுக்கு பாய்ச்சிய நீரென விரயமாகா
வாழ்வுக்கு அடித்தளம் முதல் மேல்தளத்துக்கும்
வழிகாட்டும் கைக்காட்டியாய் எங்கள் ஆசான்..!!
விதைகளில் பழுது நீக்கி விளைச்சலில்
வீரியம் கூட்டும் விவசாயி,- பிஞ்சுக்
குழந்தைகள் நெஞ்சில் அறிவை விதைக்கும்
அர்ப்பண வாழ்க்கை ஆசான் வாழ்க்கை..!!
எளிதில் புரியா வாழ்வதனை வகைதொகையாய்
வகுத்துக் கொள்ள வழிச் சொல்லி
வாழும் காலம் வரை ஆலமரமாய்
நிழல் தரும் அறிவு சுடர்..!!
உலக அறிவை ஊட்டி வளர்த்து
அறிவியல் புதுமைகள் ஆக்கி வைத்து
உலவியல் உறவியல் உயிரியல் உண்மைகள்
பலப்பல திறமைகள் வளர்த்து விட்டார்
பிறப்புக்கும் இறப்புக்கும் பொருள் தந்து
பிழைப்புக்கும் வாழ்வுக்கும் பொருள் ஈந்து
வள்ளுவம் சொல்லிய நல்லறம் காத்திட
வளமான பாரதம் அமைந்திட தோளீந்து
வருங்காலம் தீர்மானிக்கும் வள்ளல்கள்,- இந்திய
தேசம் செதுக்கும் சிற்பிகள் உங்கள்
கரங்களில் தேசத்தின் வளர்ச்சிகள்,- வளமான
செல்வமாய் மனிதம் செய்வீர்..! செய்வீர்..!!
நாளைய சமூகம் செல்லும் பாதையை
நமக்கு இன்றே சீர் செய்யும்
நல்ல பணி தொடர வேண்டி
இனிய ஆசிரிய தின வாழ்த்துகள்.
***வணக்கங்களுடன்***
-தமிழ்க்காதலன்.
என் அன்புக்குரிய வலைப்பூ தோழமைகளுக்கு தமிழ்க்காதலனின் இனிய வணக்கம்,
உங்களிடம் ஒரு மகிழ்ச்சியான விடயத்தை பகிந்து கொள்ளவே இந்தப் பதிவு. தமிழ் மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் நலம் பயக்கும் விதமாகவும், வளம் சேர்க்கும் விதமாகவும் மூன்று மாதங்களுக்கு முன்பு முகநூலில் “தமிழ்க்குடில்” என்ற பெயரில் தனிக்குழுமம் ஒன்று தொடங்கி உள்ளோம்.
இத்தளத்தின் மூலம் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் வகையில் பல பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. கவிதை, கட்டுரை, ஆராய்ச்சிக் கட்டுரைகள் என பலக் கோணங்களில் தமிழை வளர்க்கவும், தமிழர்களின் அடுத்த தலைமுறைக்கு தமிழை எடுத்துச் செல்லவும், இந்த தலைமுறையை தமிழில் பேசவைக்கவும் முயற்சிகள் எடுக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன.
எமது உறவுகளான இணையதள தோழமைகள் பலரை அதில் நானே இணைத்து விட்டிருக்கிறேன். கொஞ்சம் அதைக் கவனிக்கவும். இன்னும் நிறையப் படைப்பாளிகளை அதில் சேர்க்கவும், தமிழுக்கு தொண்டு செய்யவும் எண்ணம்.
அதற்கான முகவரி இணைப்பை இங்கு தருகிறேன்.
https://www.facebook.com/groups/209486265759191/
இந்த இணைப்பை கிளிக் செய்து தாங்கள் இந்த குழுமத்தில் சேர விருப்பம் தெரிவிக்கலாம். உடனடியாக சேர்த்துக் கொள்ளப் படுவீர்கள்.
தமிழில் அக்கரையும், ஆர்வமும் உள்ள அத்தனை நல்லுங்களையும் வரவேற்கிறேன்.
* முக்கியமாக நல்லப் படைப்பாளிகள் அனைவரையும் வரவேற்கிறேன். இதயச்சாரலுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வருகைத் தரும் அத்தனைப் பேரையும் கேட்டுக் கொள்கிறேன்.
உங்களின் படைப்புகளுக்காகவும், பங்களிப்புகளுக்காகவும் காத்திருக்கிறேன்.
போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப் பெறும் நபருக்கு வீட்டு முகவரிக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களை எதிர்ப்பார்த்த வண்ணம்..,
-தமிழ்க்காதலன்.