Monday, May 14, 2012

சுடலைச் சுடரில்...!


அடைத்து கிடந்த கூடுடைத்துக் கிளம்ப
சுமந்து திரிந்த நினைவுகளின் எரியூட்டலில்
இறகு உதிர்ந்த பறவையாய் எதிர்காலம்
உனை இழந்து தவிக்கும் நிகழ்காலம்..!

கனத்து கிடந்த கணங்கள் முழுக்க
கண்கள் வெடித்து உதிர்த்த செங்கனல்
கனத்து கிழித்த கன்னக் கோடுகளில்
கிழிப்பட்டு கிடக்கிறது கந்தலாய் இதயம்...

கிளைவிட்ட மரங்கள் கிடக்க – நீ
எனைவிட்டு தனித்து போனதெங்கே..?
உன்விரல் பட்டயாவும் என்னோடு பேசுகிறது
உனைமட்டும் காணாமல் உயிர் கூசுகிறது...!

யார் தருவார் ஈடற்ற உன்னன்பை..?
யார் வருவார் உன்போல் உற்றதுணை...?  
எவரிடத்தும் அஞ்சாதவன் கெஞ்சுகிறேன் – கேட்கிறதா
என் ஈனக்குரல் உன்னிரு செவியில்...!

ஓலமிடும் நினைவுகளில் தளும்பும் மனம்
ஒப்பாரி வைக்கிறது உன்போல் ஒப்பாரின்றி...!
மூலவன் மூட்டிய தீயில் எரிவது
நீ மட்டுமா...? கனிந்த திருமேனி

கருக சம்மதிக்கா நானும்தான் எரிகிறேன்...
காட்டுச்சிங்க முனை கட்டுவிறகா தகிப்பது...?!
காட்டிய இடத்தில் நீட்டிய தீயில்
கருகுமுயிர் உருகுவது உனையன்றி யாரறிவார்..?!

ஆதாரமாய் ஆதூரமாய் அரவணைத்து ஆதரித்த
ஆருயிர் தனைப்பிரிந்த கொடும்பாவி யானேன்
ஆற்றவொணா சீற்றம் கொள்ளும் இதயத்தில்
ஆறவொண்ணா தீக்காயம் தந்து சென்றாய்

உனைத்தேடி தேம்பும் உயிர் புரியாயோ..?!
எனைத் தந்து உனைமீட்க வழியுண்டோ..?!
புவியில் வீழ்வேனோ..? இனிநான் வாழ்வேனோ..?
புனித உன்பாதம் ஒன்றே பணிகிறேன்.


6 comments:

சுதா said...

//யார் தருவார் ஈடற்ற உன்னன்பை..?
யார் வருவார் உன்போல் உற்றதுணை...?
எவரிடத்தும் அஞ்சாதவன் கெஞ்சுகிறேன் – கேட்கிறதா
என் ஈனக்குரல் உன்னிரு செவியில்...!//

கேட்கிறது தோழா எனக்கு கேட்கிறது, உன் ஈனக்குரலல்ல, அன்பிற்காக ஏங்கும் குரல்... அருமையான வரிகள்.....

'பரிவை' சே.குமார் said...

நண்பா...
மீண்டு வா...
வளர்ப்பின் பாசம் உன் கவிதையில் வார்த்தைக்கு வார்த்தை வலியாய் இறங்கியிருக்கிறது...

Kayathri said...

ஆதாரமாய் ஆதூரமாய் அரவணைத்து ஆதரித்தவர் இறையாய் இருந்து அருளட்டும்...

Kayathri said...

//உன்விரல் பட்டயாவும் என்னோடு பேசுகிறது
உனைமட்டும் காணாமல் உயிர் கூசுகிறது...!//

காயத்ரி வைத்தியநாதன் said...

வலிகளை வார்த்தைகளாக்கி, வார்த்தைகளால் வலிகளை ஏற்படுத்தியுள்ளீர்...உணர்ந்த வலியை வார்த்தையில் கூறி, வலியுற்றவர்க்கு வலியுணர்ந்தவர் வார்த்தையில் ஆறுதல் கூறவியலாததால் ஆண்டவனை வேண்டுகிறேன் உங்களை ஆறுதல் படுத்த...:(:(:(

திண்டுக்கல் தனபாலன் said...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_856.html) சென்று பார்க்கவும்...

நன்றி...

நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... நன்றி